சாய்ந்தமருதில் இரவில் பலத்த துர்நாற்றம் வீசுவது தொடர்கிறது : களவிஜத்தில் ஈடுபட்டது சுகாதாரத்துறை, காரணம் கண்டறிவதில் இழுபறி !!!!!

சாய்ந்தமருதில் இரவில் பலத்த துர்நாற்றம் வீசுவது தொடர்கிறது : களவிஜத்தில் ஈடுபட்டது சுகாதாரத்துறை- காரணம் கண்டறிவதில் இழுபறி !!

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதில் சில நாட்களாக மாலை முதல் அதிகாலை வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் தொடர்ந்தும் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச வாசிகள் இந்த தூர்நாற்றம் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் விலங்கறுமனையிலிருந்து வருவதாகவும், மாட்டின் என்புகள் மற்றும் மாட்டின் தோலை தீயிட்டு அழிப்பதனால் வரும் துர்நாற்றம் என்றும் தெரிவித்ததுடன் இந்த துர்நாற்றம் காரணமாக குடியிருப்பு பிரதேசங்களில் நாங்கள் பலத்த சங்கடங்களை அனுபவிப்பதாகவும், குறித்த பிரதேசத்திலிருந்து துர்நாற்றம் காரணமாக இடம்பெயறவேண்டிய நிலை உள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மட்டுமின்றி சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் பொதுமக்களினால் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களும், பொதுமக்களும் சுகாதாரத்துறையினருக்கு எடுத்துரைத்ததுடன் குறித்த பிரச்சினையின் அவசர நிலையறிந்து துர்நாற்றம் வருவதாக பொதுமக்கள் குற்றம்சுமத்திய விலங்கறுமனைக்கு இன்று (04) நண்பகல் திடீரெனெ களவிஜயம் மேற்கொண்டு கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நியாஸ், பொதுசுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.

இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்ட நேரம் அந்த விலங்கறுமனையில் பாரியளவிலான துர்நாற்றம் வீசுவதற்கான எவ்வித காரணங்களும் இல்லாதிருந்ததையும்  மாடுகளை அறுக்கும் இடம் சுத்தமாக இருந்ததுடன் உப்பு மற்றும் இரசாயன பதார்த்தங்களை கொண்டு தோலை பதப்படுத்தி வைத்திருந்ததையும், குவித்து வைத்திருக்கும் என்புகளை இயந்திரங்களை கொண்டு தூளாக்கி வைத்திருந்ததையும் அங்கு தோல்கள் வெயிலில் உளறவிடப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

விலங்கறுமனை நடவடிக்கைகளை ஒழுங்காக செய்வதற்கு சோடியம் சல்பேட் எனும் இரசாயன பொருளை பயன்படுத்தி வருகின்றோம். இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக அந்த இரசாயன பொருளை இறக்குமதி செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இருந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட சோடியம் சல்பேட் எனும் இரசாயன பொருள் துறைமுகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தாண்டியும் நாங்கள் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு சுகாதார வழிமுறைகளின் படியே இந்த விலங்கறுமனை நடவடிக்கைகளை ஒழுங்காக செய்து வருகிறோம். குறித்த பிரதேசத்திலையே நாங்களும் வாழ்ந்து வருவதனால் இரவு நேரங்களில் வரும் துர்நாற்றம் உண்மையே. ஆனால் அது எங்கள் விலங்கறுமனை நடவடிக்கை மூலம் ஏற்படுவதல்ல. எங்களின் விலங்கறுமனைக்கு நேரடியாக வந்து பரிசோதனை செய்துள்ள சுகாதார தரப்பினர் எங்களின் விலங்கறுமனை நடவடிக்கைகளை ஒழுங்காக செய்ய முன்வைக்கும் தீர்வை ஏற்று அதன்படி நடக்க தயாராக இருக்கிறோம் என விலங்கறுமனை உரிமையாளரான மீராசாஹிப் அஷ்ரப் சுகாதாரக்குழுவினரிடம் தெரிவித்தார். நீண்டநேரமாக ஆய்வுசெய்த சுகாதாரத்தரப்பினர் விலங்கறுமனை நடவடிக்கை தொடர்பில் பல்வேறு ஆலோசனைகளை விலங்கறுமனை ஊழியர்களுக்கு இதன்போது வழங்கினர்.

பின்னேர நேரங்களில் முறையற்ற விதமாக ஆற்றோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளினால் இரவு நேரங்களில் ஆவியிர்ப்பு நடவடிக்கை நடைபெறும்போது துர்நாற்றம் வீசிவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பெரியளவில் நடத்தப்பட்டு வரும் கல்முனை பிரதேச கோழிக்கடை ஒன்றை கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தலைமையிலான சுகாதாரக்குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு பரிசோதனை செய்தனர். இருந்தாலும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இரவு நேரங்களில் வீசும் துர்நாற்றத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் தொடர்ந்தும் இது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு செய்ய தயாராக இருப்பதாக களப்பணி செய்த சுகாதாரக்குழுவினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்