இலங்கையை சீனா கைப்பற்றலாம்!! தொடரும் அச்ச நிலை

சீனா திபத் நாட்டைக் கைப்பற்றி புத்த மதத்தை எடுத்துக் கொண்டதுபோல், இலங்கையையும் கைப்பறிவிடுமோ என்ற பயம் எனக்குள்ளது. எனவே எமது நாட்டின் பிரச்சனையைத் தீர்க்க இறைவழிபாடே தேவை என அருட்தந்தை ஜோன் ஜோசம் மேரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்காக மதத் தலைவர்களின் ஆலோசனைகள் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது நாட்டில் இன்று நேற்றல்ல. பல்லாண்டு காலமாக அரசியல் ரீதியாக பிரச்சினைகள் இருந்து வருகின்றன. வடகிழக்கில் மிகவும் மோசமான பிரச்சினைகள் இருந்தன.

அப்போதும் கூட அஹிம்சை வழியில் தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிராம் செய்தார்கள். தற்போதும் நாட்டில் அஹிம்சை ரீதியில் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஆனாலும் மக்களைத் தொடுவதற்கு பயப்படுகின்றார்கள். மக்களுக்கு ஏதும் செய்தால் உலக நாடுகள் தட்டிக் கேட்கும் எனப் பயப்படுகின்றார்கள்.

அநீதிகளுக்கு எதிராக எதிர்த்துப்போராட வேண்டும் என்பது எமது திருச்சபையின் கொள்கை. தற்போது அதுதான் எமது நாட்டில் நடைபெறுகின்றது.

அநீதிகளுக்கு எதிராக மதத் தலைர்வகள் என்ற ரீதியில் நாங்களும் அமைதியான முறையில் அனைவருக்காகவும் குரல்கொடுக்க வேண்டும்.

தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், கிறிஸ்வர்கள், உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு பதாகைகளுடன் வெளியே வர வேண்டும்.

இவ்வளவு சொல்லியும், காதுகேளாதவர்கள் போல், கண்கள் தெரியாதவர்கள் போல், அரசாங்கம் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறு இருக்கின்ற அரசாங்கம் மக்களைத் தாக்கப்போகின்றார்களா, மக்களின் உரிமைகளைப் பறிக்கப்போகின்றார்களா? என்ற பயம் எனக்குள்ளது.

எரிபொருள் இல்லை, உண்பதற்கு ஒன்றுமில்லை, பணமில்லை, இந்த நிலையில் நாட்டில் சீனா போன்ற வெளிநாடுகளின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது” என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்