அம்பலமாகிய சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடகம்!!
பிரதி சபாநாயகர் தெரிவு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்தி விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இன்று வெளியிட்டுட்ட பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது,
“பிரதி சபாநாயகர் பதவிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய சிலர் அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டதாக அண்மைய நாட்களில் அரங்கேற்றிய நாடகத்தை இது அம்பலப்படுத்தியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, தற்பொழுது நாடாளுமன்றில் பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஆளுந்தரப்பில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபா டி சில்வா பரிந்துரைத்தார்.
அதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த உறுதி செய்தார். இந்த பரிந்துரைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குவதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சியின் தரப்பிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பரிந்துரைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல அதனை வழிமொழிந்தார்.
கருத்துக்களேதுமில்லை