பாலமுனை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் குரலெழுப்பினார் எச்.எம். எம். ஹரீஸ் எம்.பி. 

நூருள் ஹுதா உமர்.
நேற்றிரவு அம்பாறை மாவட்ட பாலமுனை பிரதேசத்தில் பொலிஸ் காவலரன் ஊடாக பயணித்த இளைஞர்களை நிறுத்தி அங்கு கடமையிலிருந்த பொலிஸார் அவ்விளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து இடம்பெற்ற தாக்குதலுக்கு பொதுமக்கள் நியாயம் கேட்டுக்கொண்டிருந்த போது அங்கு வருகைதந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் ஒரு இளைஞர் மீது துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். அந்த இளைஞர் உட்பட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சகலரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். இந்த அசம்பாவிதத்தின் காரணமாக பிரதேச மக்கள் கடுமையான கோபத்துடன் இருக்கிறார்கள். இந்த சம்பவம் ஏற்று கொள்ள முடியாதது. என்னுடைய கண்டங்களை இங்கு பதிவு செய்து வைக்கிறேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸாரின் இந்த செயல் தொடர்பில் உரிய விசாரணை செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமாத்திரமின்றி இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும், ஊடகவியலாளருக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க மக்கள் பாதுகாப்பு அமைச்சர் முன்வர வேண்டும்.
பொலிஸாரின் அராஜக செயல் காரணமாக மக்கள் பயத்துடனும், பதட்டத்துடனும் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான பாதுகாப்புக்களையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.