இளம் பொலிஸ் அதிகாரி உட்பட 08 பேர் நேற்றைய மோதல்களில் பலி ; 216 பேருக்கு காயம்

-சி.எல்.சிசில்-

நாடளாவிய ரீதியில் நேற்று (09) இடம்பெற்ற மோதல்களில் இதுவரை 08 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அடங்குகிறார்.

கண்ணீர் புகைக் குண்டு வெடித்ததில் 28 வயது உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு மோதலில் காயமடைந்த மற்றுமொருவர் மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் இளைஞர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதேவேளை வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.

இமதுவ பிரதேச சபையின் தலைவர் சரத் குமாரவும் அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பில் இடம்பெற்ற மோதல்களில் காயமடைந்த 216 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துடன் அவர்களில் 5 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிய வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்