மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பூரண ஆதரவு வழங்குவோம்.– தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவிப்பு

 

(திருக்கோவில் நிருபர்)

 

கட்சி வேறுபாடுகளையோ அரசியல் கணக்கு வழக்குகளையோ கணக்கில் எடுக்கும் நேரம் இதுவல்ல என்னும் வகையில் அவருக்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டியதன் அவசியம் பொறுப்புள்ள கட்சிகளின் கடமையாக உணரப்படுகின்றது எனவே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு என்றும் பூரண ஆதரவு வழங்குவோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.

 

தற்போதுள்ள அரசியற் களநிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

 

இவ்வாண்டு ஆரம்பத்திலிருந்து எமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் நாட்டின் பிரதமராயிருந்த கௌரவ.மஹிந்த ராஜபக்ச அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்தமையினை அடுத்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

நாடு எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான உடனடி தீர்வாக புதிய பிரதமரின் நியமனமும் அவரது அனுபவம்மிக்க முன்னெடுப்புகளும் அமையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

 

எனவே கட்சி வேறுபாடுகளையோ அரசியல் கணக்கு வழக்குகளையோ கணக்கில் எடுக்கும் நேரம் இதுவல்ல என்னும் வகையில் அவருக்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டியதன் அவசியம் பொறுப்புள்ள கட்சிகளின் கடமையாக உணரப்படுகின்றது.

 

இவையனைத்தையும் கருத்தில் கொண்டு எமது தேசத்தின் ஒற்றுமைக்கும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கும் கிழக்குமாகாணத்தின் தனித்துவத்துக்கும் பங்கம் ஏற்படாதவாறு எமது பாராளுமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே இன்றைய சூழலில் ஆக்கபூர்வமானதாக அமையும் என கருதுகின்றோம்

 

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் அரசியல் இருப்பை பேணிப் பாதுகாப்பதற்கும் தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதார கட்டமைப்பினை வலுவாக்கி கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலைபோறான சூழலை உருவாக்குவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் எவ்வகையான தியாகங்களைச் செய்வதற்கும் தயாராகவே இருக்கின்றனர்

 

பொருளாதார ரீதியாக நாடு எதிர்நோக்கி இருக்கின்ற மிக இக்கட்டான இச் சூழலில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது மக்கள் வழங்கிய ஆணை மூலம் கிடைத்திருக்கின்ற நாடாளுமன்ற ஆசனத்தின் அதிகாரங்களை பூரணமாக பயன்படுத்த ஒருபோதும் தயங்காது என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்