மகாராணியின் பூதவுடல் நல்லடக்கம்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல், நேற்றிரவு(19) நல்லடக்கம் செய்யப்பட்டது.
வின்சர் கோட்டை வளாகத்திலுள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் உள்ள அரச பெட்டகத்தினுள் மகாராணியின் பூதவுடலை தாங்கிய பேழை இறக்கப்பட்டது.
அர்ப்பணிப்புக்கான சேவையின் போது அதிலிருந்து கிரீடம் மற்றும் ஆபரணங்கள் எடுக்கப்பட்டன.
இலங்கை நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் மகாராணியின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் மகாராணியின் இறுதிக் கிரியை இடம்பெற்றதுடன் இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியின் தந்தையான ஆறாம் ஜோர்ஜ் மன்னர் ஆகியோரின் பூதவுடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகிலேயே மகாராணியின் பூதவுடலும் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடலை தாங்கிய வாகனப் பேரணி பயணித்த பாதையின் இருமருங்கிலும் கூடியிருந்த மக்கள், மலர்களை தூவி மகாராணியின் இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நேற்று(19) காலை இடம்பெற்ற இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பலர் உள்ளிட்ட சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தனர்.
இதனையடுத்து மகாராணியின் பூதவுடலை தாங்கிய பேழை, வெலிங்டன் ஆர்க் நோக்கி அணிவகுப்பாக பயணத்தை முன்னெடுத்தது.
பின்னர் வின்சர் மாளிகையை சென்றடைந்த மகாராணியின் பூதவுடலுக்கு ஒரு நிமிட மென அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அங்கிருந்து புனித ஜோர்ஜ் தேவாலயத்திற்கு மகாராணியின் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.
இதற்கான அணிவகுப்பில் மன்னர் மூன்றாம் சாள்ஸ் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் அடங்கலாக 800 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
மகாராணி அடக்கம் செய்யப்பட்ட புனித ஜோர்ஜ் தேவாலயம் அமைந்துள்ள வின்ட்சர் கோட்டை, உலகிலுள்ள கோட்டைகளில் மிகப்பெரிய கோட்டையாக திகழ்கின்றது.
இது இங்கிலாந்தின் பெர்க்சையரில் வின்ட்சர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினரின் பிரதான வசிப்பிடமாக காணப்படும் வின்சர் கோட்டையில் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து எதிர்வரும் 26ஆம் திகதி வரை அரச குடும்பத்தினர் துக்கதினம் அனுஷ்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

















கருத்துக்களேதுமில்லை