250 மில்லியன் டொலர் இலஞ்ச விவகாரம்: நீதிமன்று உண்மையை பகிரங்கப்படுத்தும்! நீதியமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்
எம்.வி.எக்ஸ்பிரஸ் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சி.ஐ.டிக்கு சகல தகவல்களையும் வழங்கியுள்ளேன். ஆகவே, சகல விடயங்களையும் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த முடியாது. உண்மையை நாட்டு மக்களுக்கு நீதிமன்றம் பகிரங்கப்படுத்தும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, 250 மில்லியன் டொலர் இலஞ்சம் விவகாரத்தில் சாமர குணசேகர என்பது பொய்யான பெயர், மஞ்சு ஸ்ரீநிஸ்ஸங்க என்ற பெயரே உண்மை என தேசிய பத்திரிகை வெளிட்டுள்ளது. இதன் உண்மை தன்மை என்ன என்று நீதியமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் விடயத்தில் சாமர குணசேகர என்பரின் பெயரை நான் குறிப்பிடவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடியே ஊடகங்களுக்கு அந்த பெயரைக் குறிப்பிட்டார்.
மஞ்சு ஸ்ரீ நிஸ்ஸங்க என்பரே சாமர குணசேகர அவர் முன்னாள் அமைச்சரின் உறவினர் என ஒரு செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிஸ்ஸங்க என்பவர் ஊடக சந்திப்பை நடத்தி தான் சாமர குணசேகர அல்லர் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்து கேள்வி எழுப்பிய காவிந்த ஜயவர்தன சாமர குணசேகர என்று குறிப்பிடப்படும் நபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவாவின் உறவினர் என செய்தி வெளியாகியுள்ளன. இது பாரதூரமானதொரு குற்றச்சாட்டு இதன் உண்மை தன்மை என்ன. – என்றார்.
இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் இந்த விடயத்துடன் தொடர்புடைய சகல விடயங்களையும் சி.ஐ.டிக்கு வழங்கியுள்ளேன். அனைத்தையும் நாடாளுமன்றத்தின் பகிரங்கப்படுத்த முடியாது. விசாரணை அறிக்கையை சி.ஐ.டி.யினர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கும்.நாட்டு மக்களுக்கு உண்மையை நீதிமன்றம் பகிரங்கப்படுத்தும். – என்றார்
கருத்துக்களேதுமில்லை