ஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.
ஈழத் தமிழரின் பிரச்சனைகளைத் தெரியாத ஈழத் தமிழர் இருக்க முடியாது. பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதில்தான் குழப்பநிலை உள்ளது. தீர்வு காண வேண்டுமாயின் நாம் சில அடிப்படை உண்மைகளை அறிந்துகொண்டு அவற்றின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் யாரும் தாம் நினைத்தபடி விரும்பியபடி அனைத்தையும் அப்படியே சாதித்துவிட முடியாது.இயற்கை நியதிகளின் கட்டுப்பாட்டில் உலக ஒழுங்குகளை அனுசரித்துத்தான் நாம் செயற்பட முடியும். எம்மால் மாற்றக்கூடியவை எவை மாற்ற முடியாதவை எவை என்று கண்டறிந்து மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொண்டு மாற்றக்கூடியவற்றை மாற்ற முயற்சிப்பதே எமது வாழ்க்கையின் செயற்பாடாக இருக்க வேண்டும். நாம் விரும்பியவாறு இயற்கையை, உலகத்தை மாற்ற வேண்டும் அதற்காகவே போராடுவோம்,இல்லாவிட்டால் அதற்காகவே இறந்துவிடுவோம் என்றவாறு நினைப்பவர்கள் ஒருபோதும் அப்படி அடைந்துவிட முடியாததோடு இறந்துபோவதைத் தவிர வேறு பயன் இருக்க முடியாது. எமது ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கு அதுவே காரணமாகும். அதிலிருந்தாவது நாம் பாடம் கற்று அதன் அனுபவ அடிப்படையில் நமது அடுத்த செயற்பாடுகளை முன்னெடுத்தால் வெற்றி நமதே. அப்படியில்லாமல் பழைய சிந்தனையிலேயே இருப்போமானால் தொடர்ந்தும் முள்ளிவாய்க்கால்கள்தான் ஏற்படும்.
எமது அரசியல் உரிமைகளை சர்வதேசம் தரமுடியாது. காரணம் அது அவர்களிடம் இல்லை. அதை எம்மிடமிருந்து பறித்து வைத்திருப்பவர் இலங்கை அரசுதான். அதனால் அந்த அரசிடமிருந்துதானே அதை பெறவேண்டும். இன்று நமக்கு உள்ள ஒரே ஒரு வழி இந்தியா மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய இலங்கை அரசுடன் நடத்தும் இராஜதந்திர அரசியற் போராட்டமே. புதிய வழியில், புதிய திசையில், புதிய கோணங்களில் சிந்திக்கக் கூடிய சிந்தனையாளர்கள் தான் அப்படியான இராஜதந்திர அரசியற் சதுரங்கத்தில் ஈடுபடமுடியும். நமது இலட்சியத்தை, நோக்கத்தை உயர்வாக வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அது கிடைக்கும் வரை வேறு எதையும் ஏற்றுப் பயன்படுத்த மாட்டோம் என்றால் நலிவடைந்து அழிந்து விடுவோம். எனவே அந்தந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப கிடைப்பதைப் பயன்படுத்தி அதனால் கிடைக்கும் பலத்தில் நின்றுகொண்டு தொடர்ந்து செயற்பட வேண்டும். எமது அரசியற் போராட்டங்களில் சாம, பேத, தான, தண்டம் என்ற படிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். இழப்பையும் வரவையும் சீர்தூக்கி ஆராய்ந்துதான் முடிவுகளை எடுக்க வேண்டும். வெறுமனே உணர்ச்சி வசப்படுவதால் மற்றவர்களையும் உணர்ச்சி வசப்படுத்தி கொதிநிலையில் வைத்திருப்பதால் சில தற்காலிக சுயநல அரசியல் வாதிகள் தமக்கான லாபங்களை பெறலாமே தவிர பொது மக்களுக்கான நிலையான நன்மைகளை பெறவே முடியாது. நாம் அவ்வாறானவர்களை இனம்கண்டு அவர்களைப் புறம்தள்ளி சிந்தனையாளர் பக்கம் நின்று செயற்பட்டால் நன்மை நமக்கே, வெற்றி நமக்கே.
தமிழர் தலைமையும் ஒற்றுமையும்?.
இன்று இலங்கையில் இருக்கக் கூடிய அத்தனை சிங்கள தமிழ் அரசியல் வாதிகளில் அதிமூத்த பழுத்த இராஜதந்திரச் சிந்தனையாளர் செயற்பாட்டாளர் யார் என்று, சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகளாலும் குறிப்பாக சர்வதேச இராஜதந்திரிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் மேன்மை மிக்க இராஜவரோதயம் சம்மந்தன் அவர்கள்தான். இந்த வயதிலும் இவ்வளவு நிதானமாக இராஜதந்திரமாக கூர்மையாகச் செயற்படக்கூடிய ஒருவரைப் பெற்றுள்ளது தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்குக்கூட ஒரு வரப்பிரசாதமே. அவருக்கு இனியும் அடைய வேண்டிய பதவி பொருள் தேவை எதுவுமில்லை. தன்னால் தமிழ் மக்களுக்கு, இனத்திற்கு ஏதாவது பெற்றுக் கொடுக்க முடிந்தால் அதை நிறைவேற்றவே வாழ்வின் இறுதிவரை தன்னால் முடிந்தவரை செயற்படுகிறார். அவரில் குறையே இல்லையா அனைத்துமே 100 வீதம் சரியாகத்தான் செய்தாரா, செய்கிறாரா என்றால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரைவிட சிறப்பான ஒருவர் இலங்கை மக்களுக்கு குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு இல்லவேயில்லை.அவர் பக்கத்தில் நின்று அவர் இன்னுமின்னும் சிறப்பாகப் பணிகளை முன்னெடுக்க நயமாகவோ அல்லது அவருக்கு அழுத்தம் கொடுப்பதாகவோ நாம் செயற்பட்டால் தமிழினத்திற்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் வெற்றிகள் அளப்பரியன.
ஒற்றுமை
இன்று தமிழருக்கு அத்தியாவசியமாக அடிப்படையாகத் தேவைப்படுவது ஒற்றுமை, ஒற்றுமை மட்டுமே. அது மட்டுமே எமது பலம். அது இல்லாமல் நாம் யாருமே எதையுமே சாதிக்க முடியாது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அத்தியாவசிய அடிப்படை உண்மையாகும். அந்த ஒற்றுமையை இன்று யார் தலைமையில் ஏற்படுத்தலாம், ஏற்படுத்த வேண்டும், ஏற்படுத்த முடியும் என்றால் அது சம்மந்தர் தலைமையில் மட்டும்தான் என்பது சிறுபிள்ளைக்கும் கூட தெரியும், விளங்கும். அவருக்குப் பதிலாக இப்போது வேறு யார்தான் இருக்கிறார்கள்?.ஆனால் சிலர் ஏன் அதை மறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களது சில சுயநலன்கள்தான் காரணமாகும். தமிழினத்தை விற்று தம்மை வளர்க்கத் துடிக்கிறார்கள். அவர்கள் தமது நிதிபலத்தால் சம்மந்தரையும் அவரது தலைமையில் தமிழர் ஒற்றுமைப் படுவதையும் மிக மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளே ஊடுருவி அதை உடைத்து அழிக்கின்றனர். வடக்கு கிழக்கு ஒட்டுமொத்தத் தமிழ் பேசும் மக்களை இன்று விக்னேஸ்வரன் தலைமையிலோ, குமார் பொன்னம்பலம் தலைமையிலோ அல்லது வேறொரு அரச அடிவருடித் தலைவர் தலைமையிலோ ஒன்றுசேர்க்க முடியுமா?. இல்லவேயில்லை முடியவே முடியாது என்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும்.
அப்படியிருக்க ஏன் அவர்கள் சம்மந்தர் தலைமையில் மக்கள் ஒன்றுபடுவதை சிதறடிக்கிறார்கள்?. ஏன் மாற்றுத் தலைமை பற்றிப் பேசுகிறார்கள் என்றால் பதில் ஒன்றுதான். அவர்கள் இனநன்மை பற்றிச் சிந்திப்பதேயில்லை. அவர்கள் சிந்தனையெல்லாம் தமது சுய லாப அதிகாரமே. தனிப்பட்ட குரோதங்களும் பொறாமையும் சுயநலச் சிந்தனைகளுமே காரணம். சம்மந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் குறைபாடுகள் இல்லையா?. என்றால் இல்லை என்று பொய் சொல்ல முடியாது. அவர்கள் இன்னும் சிறப்பாகவும் வினைத் திறமையுடனும் பொதுநலன்களுக்காக தமது சுயநலன்களை விட்டுக்கொடுத்தும் செயற்பட வேண்டும் என்பது உண்மைதான்.ஆனால் அவர்களின் அவ்வாறான சின்னத்தனங்கள் பொதுமக்கள் நலனை பெருமளவில் பாதிக்காதவாறு கட்சித் தலைவர் மாவை, செயலாளர் துரைராஜசிங்கம் போன்றோரின் உதவியோடு சம்மந்தர் முடிந்தவரை சிறப்பாக அவற்றைக் கட்டுப்படுத்தி வழிநடத்துகின்றார். திரு சுமந்திரன் போன்ற அரசியல் விற்பன்னர்கள் சம்பந்தரின் முழுப்பலமாகச் செயற்படுவதால் அவர் நினைப்பதை அரசியலில் சாதிக்க முடிகிறது. முற்றிலுமாக தன்னலமற்ற தியாகத் தலைமைகள் எப்போதாவது கிடைக்கலாம். அப்படிக் கிடைக்கும்வரை, இருப்பதில் சிறந்ததைப் பயன்படுத்துவதே விவேகமாகும். இருப்பதைக் கொண்டு சிறப்புற வாழ்வதே மனிதவாழ்வின் இரகசியமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை சாதித்ததென்ன?.
2015 ற்கு முன் இலங்கையில் தமிழர் நிலை.
2009 ல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டபின் சிங்கள அரசு தாம் தமிழ் நாடொன்றை வெற்றி கொண்டு விட்டதாகவும் அவர்கள் தேசம் தமக்கு இனி அடிமை என்றும் இலங்கை முழுவதையும் தனிச் சிங்களப் பவுத்த நாடாக ஆக்குவதில் தடை ஏதும் இல்லை என்றும் நினைத்தார்கள், நம்பினார்கள், செயற்பட்டார்கள். அந்த அளவுகடந்த மமதையில் மகிந்த தரப்பினர் ஒரு சர்வாதிகார காட்டாட்சி நடத்தி தமது இராணுவ வெற்றியை வருடம் தோறும் கொண்டாடி தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்குவதில் அதியுச்ச வேகத்தில் செயற்பட்டார்கள். தமிழர் என்றால் அடிமைகள், சிறைக்கைதிகள் என்றே நடத்தப் பட்டார்கள். தமிழரின் காணிகள் சொத்துக்கள் மனித உரிமைகள் அனைத்தையும் கேட்பாரின்றி மகிந்த ஆட்சியாளர் தாம் விரும்பியவாறு பயன்படுத்தினார்கள். பொலிஸ் அதிகாரம் என்று வேறாக இருக்கவில்லை. அனைத்து ஆயுதப் படையினரும் பொலிஸ் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். இராணுவத் தளபதிகளே அரசாங்க அதிபர்களாகவும் ஆளுநர்களாகவும் செயற்பட்டனர். சட்டம் நீதி அறவே இருக்கவில்லை. ஒரு சாதாரண சிப்பாய்க்கு இருந்த மறைமுக அதிகாரம் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்குக்கூட இருக்கவில்லை. தமிழரின் எதிர்காலம் அமாவாசை இருட்டாகவே இருந்தது. தமிழர் பகுதிகளுக்கு சிங்கள மக்கள் மிகச் சுலபமாகச் சென்று வரவும் அங்கே அவர்களின் வாழ்க்கை வசதிகளுக்காகவும் வடக்கின் வசந்தம், கிழக்கு உதயம் என்ற பெயர்களில் பெருந்தெருக்கள் பாலங்களும் அங்கு சிங்களவர்களுக்கான பொருளாதார அபிவிருத்திகளும் பெருமளவில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. தமிழ்ப் பிரதேசங்களை சிங்கள பவுத்த மயமாக்கல் தங்குதடையின்றி முன்னேறியது. ஈழத் தமிழினத்தின் அந்த இருண்ட காலத்தை, அதற்குத் தலைமை தாங்கிய மகிந்த குடும்பத்தினரை எந்தத் தமிழனும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியுமா?. அதே ஆட்சி மீண்டும் வந்துள்ளதே!. இந்த அரசில் நன்மைபெற முடியாவிட்டாலும் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கவாவது தமிழர் ஒன்றுதிரள வேண்டாமா?. இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு வியூகங்களை வகுத்து தனது அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரே அமைப்பு, கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்திய மாற்றங்கள்:-
இந்த நிலையிற்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் அரசியற் பயணத்தை 2010 பொதுத்தேர்தலில் இருந்து மீண்டும் ஆரம்பித்தது. 2015ல் அந்தக் கொடிய மகிந்த அரசைத் தோற்கடித்து (ஒரு சாதனை) ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தமிழினத்தை 2019 இறுதிவரை வழிநடத்தி வந்துள்ளது. வெள்ளைவான் கடத்தல் இல்லை, இராணுவ அதிகாரிகளின் ஆட்சி இருக்கவில்லை. இராணுவத்தின் பொலிஸ் அதிகாரம் பறிக்கப்பட்டு முகாம்களுள் முடக்கப்பட்டனர். கேட்கவே யாருமற்ற நிலையில் கொடுமைப் படுத்தப்பட்ட தமிழினம் திருப்பிக் கேள்வி எழுப்ப முடிந்தது. தட்டிக் கேட்க முடிந்தது. அரசாங்க உயர்மட்டத்தில் இருந்து திட்டமிட்ட சிங்கள பவுத்த மயமாக்கல் இருக்கவில்லை. ஆனால் 2015ல் அரச தலைமை மாறினாலும் அரசநிர்வாகிகள், அரச இயந்திரம் மாறவில்லை. அதனால் மகிந்தவின் தூண்டுதலால் சில அமைச்சர்களின் ஆதரவோடு மகாவலி அபிவிருத்தித் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம், தொல்பொருள் ஆராச்சித் திணைக்களம் என்பவற்றால் சிங்கள,பவுத்த குடியேற்றங்கள் கொஞ்சம் தொடர்ந்தது உண்மையே. ஆனால் அவை முன்போல் பெரியளவில் நடைபெறாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தியது. கன்னியா வெந்நீரூற்று, நீராவியடிப் பிள்ளையார் போன்ற பல விடயங்கள் சுமந்திரனின் சட்ட நடவடிக்கைகளால் தாற்காலிகமாகவேனும் தடுக்கப்பட்டுள்ளன.
அரசியல் உரிமைகளைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் தமது சிறு சிறு விடயங்களுக்குக் கூட சுதந்திரமாகப் போராடினார்கள், போராடி சில பயன்களைப் பெற்றார்கள். பெருமளவில் சட்டத்தின் கீழான சுயாதீன நீதிமன்றங்களின் ஆட்சி நடந்தது. ஜனாதிபதியின் சர்வாதிகார நிலை அகற்றப்பட்டது. நிர்வாகங்களில் அரசியற் தலையீடு மிகப்பெருமளவு குறைக்கப்பட்டு அந்தந்த சுயாதீன ஆணைக்குழுக்களே அரச நிர்வாகங்களை நெறிப்படுத்துகிறார்கள். தேர்தற் குளறுபடிகள் மிக மிகக் குறைவு. மக்கள் நின்மதியாக அன்றாட கருமங்களில் ஈடுபட்டார்கள். தமிழினம் என்ற வகையில் வெளிப்படையாகப் பாகுபாடு காண்பிப்பது குறைந்திருந்தது. தமிழரின் பிரதான நினைவு நாட்களைக் கூட கொண்டாட அனுமதிக்கப் பட்டார்கள். அரசியற்கைதிகள் 92 பேரைத் தவிர125 பேர் விடுதலையாகினர். காணாமற்போனோர் அலுவலகம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் தீர்வு இன்னும் வரவில்லை. நிறைவேற்ற முடியாவிட்டாலும் திரு சுமந்திரன் போன்றோரின் விடாமுயற்சியால் புதிய அரசியல் திட்டம் பாதி வழிக்காவது கொண்டுவரப் பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் தென்னிலங்கையில் ஏற்பட்ட எதிர்பாராத அரசியற் குழப்பங்களால் அரசு கவிழ்க்கப்பட்டதால் சிலவற்றை நிறைவேற்ற முடியாமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படிக் குறை கூறலாம்.
அபிவிருத்தி
அபிவிருத்தி, மற்றும் தமிழர்பகுதி நிர்வாக விடயங்களில் தமிழர் பிரதிநிதிகளும் உள்வாங்கப் பட்டார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு யாழ் விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம், பல மீன்பிடித் துறைமுகங்கள் உட்பட 5200 கோடி வரை செலவிடப்பட்டது. 80 வீதத்திற்குமேல் தனியார் காணிகள் விடுவிக்கப் பட்டுள்ளன. 75 வீதத்திற்கு மேலான அரச காணிகளும் விடுவிக்கப்பட்டன. தொடர்ந்து காணிகள் விடுவிக்கப் படுகின்றன. மீள் குடியேற்றம் முழுமையாக இல்லாவிட்டாலும் பெருமளவு நடைபெற்றது. தமிழ் மக்களுக்குத் தேவையான வகையில் வீதிகள் நெடுஞசாலைகள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் பொருளாதார மையங்கள், சந்தைகள், போக்குவரத்து வசதிகள் அமைக்கப்பட்டன. விவசாயம், சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. இரணைமடுக்குளம் உட்பட 1000 குளங்களுக்கு மேல் புனர்நிர்மாண வேலைகள் நடந்துள்ளன. பட்டதாரிகள் உட்பட வேலையற்ற பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. நிரந்தரமற்ற தொழிலாளர்கள் பலர் நிரந்தரமாக்கப் பட்டுள்ளனர். பல தொழில் வாய்ப்புகள், உருவாக்கப் பட்டன. சுற்றுலாத்துறை ஓரளவு மேம்படுத்தப் பட்டது. புதிதாக கிராம எழுச்சி என்று அத்தனை கிராமங்களுக்குமான தனித்தனி அபிவிருத்திப் பணிகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு மில்லியன் செலவில் முன்னெடுக்கப் பட்டன. இவற்றை யாரும் மறுக்க முடியாது.
இவையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாதனைகள் இல்லையா?.225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்தில் 15 ற்கும் குறைவான உறுப்பினரால் இதைவிடவா சாதிக்க முடியும். 30 வருட சாத்வீகப் போராட்டத்தாலோ 30 வருட ஆயுதப் போராட்டத்தாலோ தீர்வு என் வரவில்லை என்று கேட்காதவர்கள் 10 வருடத்தில் அரசியற் போராட்டத்தால் தீர்வு பெற முடியாத கூட்டமைப்பு வீட்டுக்குப் போகவேண்டுமென்று ஒப்பாரி வைப்போரின் உள்நோக்கம் என்ன?. ஆனால் தமிழர்களுக்கு இன்னும் செய்யப்பட வேண்டியவை ஏராளம் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தி இதழ்கள் எல்லாம் முட்டையில் மயிர் பிடுங்குவதை போல குறைகளை மட்டும்தான் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. குறைகளை சொல்லவேண்டியது அவசியமே,ஆனால் நல்லவற்றையும் மறைக்காமல் சொல்ல வேண்டும். 2010 ற்கு முன்பிருந்த நிலையில் இருந்து மகிந்த அரசை வீழ்த்தி புதிய அரசை ஏற்படுத்தி இன்றய இந்த நிலைமையான மாற்றங்களைக் கொண்டு வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளால் அன்றி வேறு யாரும் காரணமா?. ஏன் உண்மைகள் மறைக்கப்பட்டு மக்களைக் குழப்பி கூட்டமைப்பு எதையுமே செய்யவில்லை மாறாக மக்களுக்கு அழிவையே தேடியுள்ளார்கள், துரோகம் செய்கிறார்கள் என்ற நஞ்சை மக்கள் மனதில் விதைக்கிறார்கள்?. ஒரு முள்ளிவாய்க்கால் போதாதா?.
காளான் தலைமைகள்.
2010 ல் அரசியலில் ஈடுபட, தேர்தலில் போட்டியிட யாரும் முன்வரவில்லை. முன்வந்தவர்களின் தகுதி தராதரம் பார்த்தால் ஆட்களே கிடைக்கமாட்டார்கள். அப்படியான நிலையில் ஆரம்பித்து இன்று இந்தளவு நிலைமைக்கு தமிழ் மக்களைக் கொண்டு வந்து சேர்த்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். வேறு தலைமையோ அல்லது அவர்களை வழிநடத்தும் சில புலம்பெயர் அமைப்புகளோ அல்ல என்பதை யாராவது மறுக்க முடியுமா?. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னுமின்னும் மிக அதிகமாகவே செய்திருக்கலாம். ஆனால் நண்டுகள் போன்ற தமிழ் இனத்தின் சில புல்லுருவிகள் அவர்களின் காலை இழுத்து வீழ்த்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். மகிந்தவின் இரும்புக் கரங்களைவிட இவர்களின் நண்டுக் கரங்கள் ஆபத்தானவை. விடுதலைப் போராளிகளின் நற்பெயரில் பாரிய சொத்துக்களைச் சேர்த்த சில புலம்பெயர் தமிழர்களின் நிதிபலத்தோடு பொன்னம்பலம்கள், சந்திரன்கள், ஈஸ்வரன்கள் தமிழரின் சிந்தனையில் விஷத்தை விதைத்து இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லை என்றும் தமிழ் மக்களைக் குழப்பி, நலிந்துபோய் இருக்கும் அவர்களை மேலும் உணர்ச்சி வசப்படுத்தி தமிழ் இனத்தின் அழிவில் தமது அதிகார, நிதி பலன்களைத் தக்க வைக்க அரும்பாடு படுகிறார்கள். எதையும் சிந்திக்கும் அளவுக்கு உடல் உள பலமின்றி இருக்கும் தமிழ் மக்கள் சிலரும் அவர்களின் மாயையில் சிக்கியுள்ளனர். அச்சமோ கூச்சமோ இல்லாமல் பச்சைப் பொய்யை, சுத்த மெய் போல திரும்பத் திரும்ப அடித்துக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்.
குறிப்பாக புதிய அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேறி மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் தமது சுயநலப் பித்தலாட்டங்களைத் தொடரமுடியாதென்பதற்காக அதை எப்படியும் முறியடிக்க முடியுமான அனைத்தையும் செய்தார்கள். இவர்கள் அதில் இல்லாத ஒற்றை ஆட்சியை இருப்பதாகவும் இருக்கும் சமஷ்டி அடிப்படையிலான தமிழரின் ஆட்சி உரிமைகளை இல்லை என்றும் மக்களைக் குழப்புகின்றார்கள். அதில் அளவுக்கதிகமான உரிமைகள் தமிழ் மக்களுக்குக் கொடுபடுவதாகவும் அதனால் நாடு பிளவடையப் போவதாகவும் மகிந்த சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்து அதை நம்பிய சிங்கள மக்கள் பத்து வருடம் காட்டாட்சி நடத்திய அவருக்கே மீண்டும் ஆதரவாக மாறியுள்ளனர். எமது தமிழின விரோதிகள் சிலர் அந்தக் கொடிய தென்னிலங்கைக் கட்சிகளுக்கு வாக்குக் கேட்டு வருகிறார்கள். தமது சுய இலாபத்துக்காக இரகசியமாக சிங்கள இனவெறியர் மகிந்தவோடு சேர்ந்து சிங்கள பவுத்த நாட்டை உருவாக்கி தமிழின அழிப்புக்கு உதவுவோர் இவர்கள்தான். இந்த இனத்துரோகம் ஒருநாள் சரித்திரத்தில் இடம்பெறத்தான் செய்யும். மக்கள் தெளிவடையும்போது இவர்களின் துரோகச் செயற்பாடுகளை இனம் காண்பார்கள்.
ஏனைய சில காளான் தலைமைகள் தமிழர் தலைமையை மாற்ற வேண்டுமென்று தலையால் கிடங்கு தோண்டுகின்றனர். ஆரம்பத்தில் உயிரோடு இல்லாதவர்களையும் இருப்பதாகக் காட்டி பிழைப்பு நடத்தியவர்கள் இப்போது அது எடுபடாததால் தலைமை மாற்றம் வேண்டும் என்கிறார்கள். மேன்மைமிக்க சம்மந்தரின் தலைமைக்கு மாற்றாக இவர்கள் தரவிருக்கும் தலைவர் யார்?. ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நன்மதிப்பை, நம்பிக்கையை பெற்ற வேறு ஒரு தலைவர் யார்?. தமிழர் மாத்திரமன்றி சிங்கள அரசியற் தலைவர்களும் சர்வதேசமும் மட்டற்ற மதிப்பும் மரியாதையும் செலுத்தும் ஒரே தமிழ்த் தலைவர் சம்மந்தர் மட்டும் தான். அவரால் முடியாததை நேற்று முளைத்த குட்டித் தலைமைகளால் சாதிக்க முடியுமா?. அல்லது அவர்களைத் தலைவர்களாக வளர்த்தெடுக்கும்வரை இனவெறிச் சிங்கள ஆட்சி தமிழினத்தை விட்டு வைக்குமா?. இன்றய நிலையில் சம்மந்தரைத் தவிர வேறொரு தலைமையின் கீழ் ஈழத் தமிழினத்தை ஒன்றுபடுத்த முடியுமா?. குட்டித் தலைமைகளை முன்னிறுத்துவதால் தமிழரின் ஒற்றுமைதான் சிதறடிக்கப் படுகிறது. பலவீனப் படுத்தப் படுகிறது. அழிவிற்கே வழிகோலுகிறது. இவர்கள் இனம் அழிந்தாலும் தாம் பிழைப்பு நடத்தவேண்டும் என்று தவியாய்த் தவிக்கிறார்கள். இவர்களை விடவும் கூலிக்காகப் போட்டிபோடும் சில டசின் சில்லறைகள் கூட்டமைப்புக்கு போகவேண்டிய தமிழ் மக்கள் வாக்குகளை சிதறடிப்பதால் அரச தரப்பினருக்கு தமிழர் ஊடாக நாடாளுமன்ற ஆசனம் கொடுக்கின்றார்கள். ஈழத்தமிழ் இனமே இனியும் பொறுக்காமல் இந்தத் துரோகிகளை இனம்கண்டு ஒதுக்கிவிட்டு இலங்கையில் தமிழினம் தமக்கான நிலையான வாழ்வுபெற, வருகின்ற சிங்களப் பேரினவாதப் பூதத்திலிருந்து தற்காத்துக் கொள்ள சரியான தலைமையின் கீழ் ஒன்றுபடுவோம், வென்று வாழ்வோம். முதலில் வீட்டுச் சின்னத்திற்கே வாக்களித்து பின்னர் கூடவே விருப்புவாக்கையும் செலுத்தி வரவிருக்கும் அரச பயங்கரப் பேராபத்திலிருந்து தப்பிக்கொள்வோம்.
கருத்துக்களேதுமில்லை