“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழர் தரப்புக்கு நல்ல பாடம்

“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழர் தரப்புக்கு பல்வேறு விதமான படிப்பினைகளை கற்பித்து இருக்கிறது.

ஒற்றுமையீனம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை எல்லோரும் புரிந்து கொண்டிருக்கலாம். அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அசுர பலத்தோடு ஆட்சி பீடம் ஏறி இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் தமிழர்கள் தொடர்ந்தும் பிரிந்து நின்றால் எவ்வாறான விளைவுகளை அவர்கள் எதிர் நோக்கப் போகின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

தங்களுக்குள்ளே உள்ள முரண்பாடுகள் எவ்வாறான விளைவுகளை தமிழ் மக்களினுடைய இருப்புக்கு எதிர் காலத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது.

2015ம் ஆண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் இணக்க அரசியலில் இவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி சின்னா பின்னமாக சிதைந்து காணப்படுகிறது.யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சியும், வன்னியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும், மட்டக்களப்பில் பிள்ளையான் அவர்களும் முதன்மை இடங்களை பெறக் கூடிய அளவுக்கு மக்கள் தமிழ் தேசிய நீக்க அரசியலுக்கு ஆதரவளித்து இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை மிகவும் வருந்தத்தக்க விடயமாகவே காணப்படுகிறது.

இவ்வாறான நிலைமைகள் கடந்த 2010 இல் இருந்து 2015 வரையான 7 தேர்தல்களில் இல்லை. மக்கள் சலுகைகளை பெற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் தேசியத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரான இணக்க அரசியல் இவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலைமைகளில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் பாடம் கற்பதாக தெரியவில்லை.

இன்னும் தங்களுக்கிடையில் போட்டிகளையும் பிரச்சனைகளையும் அவர்கள் ஏற்படுத்திய வண்ணமே உள்ளனர். இந்த நிலைமையில் நோக்குகின்ற போது மாற்று அணியும் ஒரு வலுவான அணியாக எதிர் கொள்ளவில்லை.

ஏனெனில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்திருப்பார்கள் எனின் ஒன்றில் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டுக்கு அல்லது கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சிக்கு வாக்களித்து இருக்க வேண்டும்.

அவர்களுக்கும் பெருவாரியான மக்கள் வாக்களிக்கவில்லை. அபிவிருத்திக்கும், இணக்க அரசியலுக்குமே கூட்டமைப்பு காட்டிய அரசியல் பாதையிலே மக்கள் போயிருக்கின்ற நிலைமைகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாவிட்டால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்ச்சியாக அரசாங்கம் மிக இலகுவான முறையில் மேற்கொள்வதற்கு வழிவகை ஏற்படும்.

ஆகவே எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வடக்கு – கிழக்கிலிருந்து ஒரு வல்லமை பொருந்தியவர்கள் அல்லது ஒரு சக்தி வாய்ந்தவர்கள், அறிவு விஞ்ஞான பூர்வமாக உரையாடக்கூடியவர், இராஜதந்திர அணுகுமுறைகளை பின்பற்றக் கூடியவர்கள் பெருவாரியாக இல்லை.

மிகச் சாதாரணமானவர்களையே மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். ஜனநாயகம் என்பது ஒரு கேலிக்கூத்தானது. அல்லது ஜனநாயகம் என்பது கும்பலின் ஆட்சி என்கின்ற லெனினுடைய கூற்றையும், அரசியல் என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் என்பதையும், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியையும், சிறையில் இருப்பவர்களை போதைப்பொருள் வியாபாரிகளையும் மண் கடத்தல் காரர்களையும், சாதாரணமானவர்களையும், பயனற்றவர்களையும் இந்த தேர்தலிலே பலர் நாடாளுமன்றம் சென்றுள்ள ஒரு அபத்தமான நிலை காணப்படுகிறது.

மாற்று அணி என்பது அவர்கள் ஒரு வாக்கு திரட்சியை ஏற்படுத்தவில்லை. வெறுமனே ஒரு கூட்டமைப்புக்கு எதிரான கோஸமாக அவர்கள் பின் பற்றினார்களோ தவிர ஒரு எதிர்ப்பு நிலையை வாக்கு திரட்சியாக மாற்றி அந்த எதிர்ப்பு மனே நிலையை வாக்கு சக்தியாக தங்கள் மீதான ஒரு கவர்ச்சிக்கு ஏற்படுத்தவில்லை.

அவர்களுடைய பேச்சை மக்கள் கேட்டார்களே தவிர ரசிக்கவில்லை. ரசிக்காத வரைக்கும் அது வாக்காக மாறக்கூடிய ஒரு நிலைமை காணப்படாது.

ஆகவே அவர்களும் பின்னடைவைச் சந்திக்க கூடிய இந்த நிலைமையில் எல்லோரும் ஐக்கியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதற்கு மாறாக இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு உள்ளே பல்வேறு விதமான பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன.

சுமந்திரன் அவர்களும் சிறிதரன் அவர்களும் பகிரங்கமாகவே கட்சியினுடைய தலைமையையும் கட்சியையும் விமர்சிக்கின்ற போக்கு காணப்படுகிறது.

இதற்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்குமா? என்கின்ற கேள்வியும் எழுகின்றது.நாங்கள் கட்சிக்கு எதிராக பேசினோம் என்று தான்தோன்றித்தனமாக எங்களை இடை நிறுத்த வேண்டுமென முற்பட்டவர்கள் தமிழரசுக்கட்சியின் ஒழுக்காற்று கோவை விதி 19 இன் பிரகாரம் எமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என கூறியவர்கள் இப்போது சுமந்திரனுக்கும் , சிறிதரனுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது ஏனைய தரப்புகளுக்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?என்கின்ற கேள்வி இப்பொழுது எழுகின்றது.

மாவை சேனாதிராஜா அவர்களினுடைய தலைமைத்துவ பலவீனமே இவ்வாறான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தலைவராக 2014 ஆம் ஆண்டு வந்த காலத்திலிருந்து ஒரு வல்லமை பொருந்தியவராகவோ, ஒரு ஆளுமை செலுத்த கூடியவராகவும் இல்லாமல் சுமந்திரன் அவர்களில் தங்கி வாழ்ந்ததன் விளைவயே மாவை சேனாதிராஜா அவர்கள் இன்றைக்கு எதிர் நோக்குகின்றனர்.

பலரை அவர் விடுவித்தும் பலரை காணா முகமாக இருந்து அறம் மாவை சேனாதிராஜா அவர்களையும் அடித்திருக்கின்றது.எப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழர்களை அழித்து ஒழித்து இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளையும் அழித்ததினால் ‘உள் வினை உருத்தி வந்துட்டும்’ என்பது போல அறம் எவ்வாறு அளித்ததோ அதே நிலைமை மாவை சேனாதிராஜாவிற்கும் தமிழரசுக் கட்சிக்கும் வந்திருக்கின்றது.

புலி நீக்க அரசியலையும் தமிழ் தேசிய நீக்கு அரசியலையும் மேற்கொண்ட சுமந்திரன் போன்றவர்களை கட்டுப்படுத்தாமலும், கட்சிக்குள் சர்வாதிகார நிலைமையை விட்டதும் சேனாதிராசா அவருடைய பங்கு.

ஏனெனில் இந்த தான்தோன்றித்தனங்களுக்கு ஒரு முடிவு கட்டப்படவில்லை. ஆனால் சுமந்திரன் அவர்களும் சிறிதரன் அவர்களும் பின் கதவால் கட்சியை கைப்பற்ற முனைவது ஏற்புடையது அன்று.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்