தலைவலி தீர சில ஆலோசனைகள்…….
ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி.
தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கீழ்க்கண்ட எளிய வழிகளைக் கடைபிடித்துப் பாருங்கள். தலைவலி உங்கள் பக்கம் தலைவைத்துக் கூட வராது
1. கண்ணுக்கும் தலைவலிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கண்ணுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் போது தலைவலி வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கண்ணின் பார்வை குறைவு படும்போது கண் மருத்துவரை அணுகி கண்ணாடி போட்டுக் கொள்வது முக்கியமானது.
2. படுத்துக் கொண்டு படிக்காதீர்கள், பயணத்தின் போது படிக்காதீர்கள், மிக அதிக வெளிச்சம் – மிகக் குறைந்த வெளிச்சம் ஆகிய சூழலில் படிக்காதீர்கள், மிகச் சிறிய எழுத்துரு கொண்ட புத்தகங்களைப் படிக்காதீர்கள், தெளிவான எழுத்துக்களற்ற ஒளியச்சுப் பிரதிகளைப் படிக்காதீர்கள்.
இவை எல்லாமே கண்ணை அதிக அழுத்தத்திற்குள் தள்ளி தலைவலிக்கு அழைப்பு விடுக்கும்.
தொலைக்காட்சி பார்க்கும் போதோ, கணினியில் வேலை செய்யும் போதோ அறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். இருட்டு அறையில் இவற்றைச் செய்வது கண்ணை மிகவும் பலவீனப்படுத்தும்.
அதிக வெளிச்சமானவற்றை நேரடியாய்ப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்
3. கண்ணுக்கு அதிக வேலை கொடுக்கும் பணியெனில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கண்ணுக்கு ஓய்வு கொடுங்கள். காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தினால் அதை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை இருபது வினாடிகள் இருபது அடி தொலைவிலுள்ள பொருளைப் பாருங்கள். கண்ணின் மேல் வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி வைத்து கண்ணை இதப்படுத்துங்கள்.
கண்ணுக்கு பயிற்சி கொடுங்கள். கருவிழிகளை மேல், கீழ், இடம், வலம் என எல்லைகளுக்கு அசைத்தும், மூக்கை நோக்கிக் குவித்தும் பயிற்சி கொடுங்கள். இவையெல்லாம் கண்ணை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். தலைவலி வரும் வாய்ப்பும் குறையும்.
4. கண்ணைப் போலவே, பல்லும் தலைவலிக்கு காரணகர்த்தாவாகி விடும் வாய்ப்பு உண்டு. உங்கள் பல்லை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் சரியில்லாமல் இருந்தால் உடனே அதற்குரிய மருத்துவம் செய்யுங்கள்.
அடுத்தபடியாக காதைக் கவனியுங்கள். அதிக சத்தம் தலைவலிக்கு துணைவன். அதிக சத்தத்தை தவிர்க்க வேண்டும். சத்தமான சூழலில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் சத்தம் கேட்காதபடி காதில் எதையாவது மாட்டிக் கொள்தல் உசிதம்.
5. சரியான நேரத்தில் உண்ணுங்கள். ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். சிலருக்கு தயிர் சாதம் சாப்பிட்ட உடன் தலைவலி வரும் எனில் அதை விட்டு விடுங்கள். நிறைய காரெட் சாப்பிடுங்கள். கண்ணுக்கு அது மிகவும் நல்லது. அதிலுள்ள வைட்டமின் எ கண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
காஃபைன் மூலக்கூறுகளை விலக்கி விடவேண்டும். காஃபி, குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவற்றில் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.
தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கும் தலைவலிக்கும் தொடர்பு இருக்கிறது என்பது வியப்பூட்டும் செய்தி. உடலில் தேவையான அளவு தண்ணீர் இல்லாமல் போகும் போது தலைவலி வெகுண்டெழுகிறது
6. புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும். புகை மூளையில் மெல்லிய துளைகள் வழியே பயணிக்கும். தலைவலியை தருவிக்கும் முக்கிய காரணியாக புகையின் நிக்கோட்டின் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல தூசு கூட தலை வலி வருவிக்க வல்லது. எனவே சுத்தமான இடங்களில் நடமாட முயலுங்கள். வீட்டை தூய்மையாக வைத்திருங்கள்.
வாசனைப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையையும் தலைவலியையும் உண்டாக்கும். ஏதேனும் வாசனை உங்களை அசெளகரியப் படுத்துவதாய் நீங்கள் உணர்ந்தால் அதை நிச்சயமாய் விலக்கி விடுங்கள்
7. தலைவலி வருமோ, வருமோ என கவலைப்படாதீர்கள். தலைவலியைக் குறித்தே நினைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பது உளவியல் உண்மை.
கவலை தலைவலியின் நெருங்கிய தோழன். கவலை வந்தால் கூடவே தலைவலியும் தோழனைப் பார்க்க வந்து விடும். எனவே மனதையும், உடலையும் இயல்பாக, இறுக்கமற்று வைத்திருங்கள். உங்களை எரிச்சலடையச் செய்யும் நிகழ்வுகளையோ, மனிதர்களையோ தவிருங்கள். யோகா, தியானம் போன்றவற்றைப் பின்பற்றலாம்.
8. இருக்கையில் நேராக அமராமல் இருப்பது கூட தலைவலியை தருவிக்க வல்லது. எனவே இருக்கையில் அமரும் போது சரியான முறையில் அமருங்கள்.
நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணிவதும், இதமான நிறங்களிலுள்ள ஆடைகளை அணிவதும் கூட தலைவலியைத் தவிர்க்க உதவும். வீட்டிலும் கூட அடர் நிறங்களைத் தவிர்த்து இதமான நிறங்களை சுவர்களுக்குப் பூசுவது சிறப்பானது
9. அதிக வெயிலிலோ, அதிக மழையிலோ அலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பருவத்தின் முதல் மழை காற்றின் மாசோடு கலந்து தரையிறங்கும். அதை தலையில் வாங்காதீர்கள்.
சரியான தூக்க முறையைக் கடைபிடியுங்கள். அளவான தூக்கம் அவசியமானது. அதிக தூக்கமோ, குறைந்த தூக்கமோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
10. தூய்மையாய் இருங்கள். நன்றாக குளியுங்கள். குளித்தபின் தலையை நன்றாகத் துவட்டி விடுங்கள். அதற்காக டிரையர் வாங்கி உபயோகிப்பதைத் தவிருங்கள்.
ஆவி பிடித்தல் சைனஸ் போன்ற தலைவலிகளுக்கு சிறந்தது. மூச்சுப்பாதையை தெளிவாக்கி தலைவலியை தவிர்க்க அது உதவும். தினமும் ஒருமுறை ஆவி பிடிப்பது அத்தகையோருக்கு ஆசுவாசம் தரும்.
இந்த சிறு சிறு வழிகளைக் கடைபிடித்தால் தலைவலி வரும் வாய்ப்புகளை பெருமளவுக்குக் குறைக்க முடியும்.
கருத்துக்களேதுமில்லை