ஆலையடிவேம்பில் சுமார் 44 பவுண் தங்க நகைகள் கொள்ளை!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுமார்  44 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை ஒரு மணி தொடக்கம் 3 மணிவரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிவதுடன் இதனை கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர் இன்று (16)உறுதி செய்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று வீட்டு உரிமையாளரால் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 11ஆம் திகதி நள்ளிரவை தாண்டிய நிலையில் குறித்த வீட்டின் பெண் சமையலறையில் வேலையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனது வேலைகளை முடித்த பின்னர் நித்திரை கொள்வதற்காக தனது அறைக்கு திரும்பியுள்ளார்;.

இந்நிலையில் குறித்த வீட்டின் முன்பாக இருந்த வீதியில் பயணித்த திருடன் வீட்டு நிலைமைகளை அவதானித்த பின்னர் வீட்டின் பின்புறமாக சென்று முதலாவது மாடியின் பின்புறமாக இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து நகை இருந்த அறைக்குள் சாதுர்யமாக புகுந்துள்ளதாக நகையினை பறிகொடுத்த பெண் தெரிவித்தார்.

இதேநேரம் குறித்த அறைக்குள் நுழைந்த கள்வன் அங்கிருந்த சகல பொருட்களையும் ஆராய்ந்த பின்னர் அங்கிருந்த நகைகளை களவாடி சென்றுள்ளமை 12ஆம் திகதி அதிகாலை தெரியவந்தாகவும் இது தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான சிசிடிவி காட்சிகளையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்னரும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இவ்வாறான சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

ஆயினும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் திருடர்கள் யாரும் அகப்படவில்லை என்பதுடன் இந்நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.