காலம் மாறியது..! – சுஐப் எம். காசிம்-

ஒவ்வொரு வருடத்தின்
ஒக்டோபர் இறுதிதினம்
நெருங்கி வரும் நாட்களிலே
நெஞ்செல்லாம் வலியெடுக்கும்
நினைவெல்லாம் தடுமாறி
நீர் நிறையும் கண்களிலே
உணர்வெல்லாம் தத்தளித்து
உதிரம் அலையெழுப்பும்
தாயகத்தின் நினைவெழுந்து
தவிதவித்து மனம் கதறும்
வேகாத உடலோடு
வெந்த உயிர் தொங்கி நின்று
பிறந்த தாய் மண்ணினைவில்
பிரிவில் துடிதுடிக்கும்
“இன்னுயிர்த் தாய் ஈன்றெடுத்த
இரட்டைக் குழந்தைகள் போல்
நூறு பலஆண்டுகளாய்
நோகாதும் நொடியாதும்
ஒருயிராய், ஈருடலாய்
ஒன்றிணைந்து வாழ்ந்த அந்தக்
காலத்தின் நினைவெழுந்து
கண்கள் குளமாகிவிடும்
ஓர் புலத்தில் தான் வாழ்ந்து
ஓர் மொழியைத் தான் பேசி
வாழ்ந்த அந்தக்காலத்தின்
வசந்த உறவுகளில்
காலக் கொடுங் கிழவன்
கண்பட்டுப் போனது போல்
ஒக்டோபர் தொண்ணூறு
உருக்குலைக்க வந்ததுவோ?
எண்ணி முப்பத்தி
ஓராண்டு போனபின்னும்
இன்றைக்கு என்றாற்போல்
இதயம் துடிக்கிறது
என்ன நடந்ததென்று
யாருக்கும் தெரியவில்லை
ஏனிந்தப் படையெடுப்பு
என்றெவருக்கும் புரியவில்லை
யாரும் கனவினிலும்
இதையெண்ணிப் பார்த்ததில்லை
எல்லாம் ஓரீர் நாளில்
இரண்டாகப் போயிற்று
வீட்டோடு வாசல்
வியாபாரச் சாலைகள்
தோட்டம் துரவு
தொழும் பள்ளி காணி வயல்
கை கழுத்து தங்க நகை
காசு பணம் உடுபிடவை
அத்தனையையும் பறித்து
ஆளை மட்டும் வீதியிலே
வேட்டு முழக்கத்தில்
விரட்டியடித்த வலி
ஒக்டோபர் இறுதியினை
உயிராக்கி வைக்கிறது
கண் அழுது வாய் குளறி
காட்டு மேடு பள்ளத்தில்
அரசியல் அகதிகளாய்
யாருமிலா அநாதைகளாய்
உண்பதற்கு ஏதுமின்றி
உடுக்க மாற்றுடையுமின்றி
வடக்கின் அடியிருந்து
வடமேற்கு முடிவரைக்கும்
விழுந்து எழுந்து
விறகாகிக் காய்ந்தும் போய்
உயிரைக் கையில் பிடித்து
ஓடியது கொஞ்சமல்ல
தாய் நாடு பேய் வீடாய்
தமிழகமோ சுடுகாடாய்
தமிழினத்திற்குரியரல்ல
தமிழ் தேசியமும் கிடையா
என்று வடபுலத்தின்
எண்பதாயிரம் முஸ்லிம்களும்
வந்தேறு குடிகள் என்றும்
விரட்டி அடித்ததுவும்
வீறாப்புப் பேசியதும்
ஒக்டோபர் தொண்ணூறின்
ஓரங்க நாடகமாம்
நூறுகிலோ மீற்றருக்கும்
நீளமான தூரத்தை
நொண்டி நடந்த வலி
நோவின்னும் மாறவில்லை
பாதை முழுவதிலும்
படைத்தவனின் பெயர் சொல்லி
அழுது மன்றாடியதை
யாரும் மறக்கவில்லை
இன்றைக்கில்லாவிடினும்
என்றைக்கோ ஓர் வழியை
காட்டும்படி இரந்து
கதறியதை மறக்கவில்லை
எல்லாச் சுமைகளையும்
இறைவன் மேலே சுமத்தி
ஏந்தல் நபி அவர்கள்
இரங்கலுக்காய் நோன்பிருந்து
வடபுலத்து முஸ்லிம்கள்
வாழ்வில் ஒளி வீச
அல்லாஹ்வின் பாதையிலே
அடியெடுத்துச் செல்கின்றோம்..!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.