காணாமல் போன மனைவியை 11 ஆண்டுகளாக தேடி வரும் கணவர் – ஒரு நெகிழ்ச்சி கதை

2011 ஆம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட தன் மனைவியின் உடலை 11 ஆண்டுகளாக இன்றுவரை தேடி வருகிறார் ஜப்பானை சேர்ந்த நபர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஜப்பானின் டொஹோகு நகரில் நிலநடுக்கம், அதன் விளைவாக சுனாமி ஏற்பட்டது. கிட்ட தட்ட 6 நிமிடங்கள் நீடித்த இந்த பூகம்பம், ஜப்பான் வரலாற்றிலேயே ஏற்பட்ட மிகவும் ஆபத்தான பூகம்பம் ஆகும். உலகின் பயங்கரமான பூகம்பங்களில் இது நான்காவது இடத்தில் இருக்கிறது.

இந்த பூகம்பத்தின் விளைவாக சுனாமி 40.5 மீற்றர் உயரத்திற்கு ஏற்பட்டது. இதில் கிட்டதட்ட 20 ஆயிரம் பேர் பலியானார்கள், 2000த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். காணாமல் போனவர்களில் ஒருவர் யசுவோ டகமட்சு என்பவரின் மனைவி யுகோ டகமட்சு.
அந்த பெண்ணின் உடல் அப்போது மீட்புக்குழுவினரால் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், யசுவோ தானே தன் மனைவியின் உடலை தேடி வருகிறார். 11 ஆண்டுகளாக வாரம் தோறும் அவரது மனைவி கடைசியாக இருந்த இடத்திற்கு சென்று தேடுகிறார்.

முதல் இரண்டு ஆண்டுகள் நிலப்பரப்பில் அவரை தேடி வந்தவர், பின்னர் முறையாக உரிமம் பெற்று நீர்நிலையில் தேடிவருகிறார்.
கடந்த 11 வருடங்களாக மனைவியை தேடி வரும் யசுவோ அவர் கிடைக்கும் வரை தேடுவதை நிறுத்தமாட்டேன் என கூறுகிறார்.

“ஏதாவது ஒரு இடத்தில் அவளை சந்தித்துவிட மாட்டேனா என்ற நினைப்போடு தேடிக்கொண்டிருக்கிறேன்” என அவர் கூறுவது மனதை கனக்கச் செய்கிறது. யசுவோவின் மனைவி அவருக்கு கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தியில், “நீங்கள் நலமா? எனக்கு வீட்டிற்கு செல்லவேண்டும்” என அனுப்பியிருந்ததாக தெரிவித்தார்.

யுகோவின் மொபைல் மற்றும் மற்ற சில உடைமைகள் மட்டுமே கிடைத்தன. அப்போது அந்த மொபைலில் மற்றொரு செய்தியும் இருந்துள்ளது. ”இந்த சுனாமி பயங்கரமானது” என யுகோ அவரது கணவருக்கு செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், பேரிடரின் காரணமாக அந்த செய்தி யசுவோவிற்கு வந்து சேரவில்லை.

வீட்டிற்கு செல்லவேண்டும் என யுகோ அனுப்பியிருந்தது தான் இந்த தம்பதி பேசிக்கொண்ட கடைசி உரையாடல். அப்போது முதல் தன் மனைவி கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையோடு தேடி வருகிறார் 65 வயதான யசுவோ!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.