“மரபணு மூலம் பரவும் மார்பகப் புற்றுநோய்” – எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்

ஒரு பெண்ணின் அம்மாவிற்கு மார்பகப் புற்றுநோய் பரவல் இருந்திருந்தால், அவரது மகள்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதா? டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையின், மார்பகப் புற்றுநோய் குறித்த ஆய்வுகள் சொல்வது என்ன?

பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் தாக்கம், நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மார்பகப் புற்றுநோய் குறித்த ஆய்வுகளும் பெருகியுள்ளன. அவ்வகையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை சார்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோய் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த ஆய்வின் அடிப்படையில், `ஒரு பெண்ணின் அம்மா அல்லது சகோதரிகளுக்கு புற்றுநோய் பரவல் இருந்தால், அவர்களின் மகள்களுக்கும்,சகோதரிகளுக்கும், நெருங்கிய ரத்த உறவுமுறை கொண்டவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பரவ வாய்ப்பிருப்பது’ கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் -சித்தரிப்பு படம்

மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்து; நோயாளிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையின் தலைவர் டியோ அளித்துள்ள தகவலில், “புற்றுநோய் பரவுவதைத் தடுக்க பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்து எங்கள் துறை சார்பாக மேற்கொண்டு வந்தோம். அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 பெண்களை வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். ஆராய்ச்சியின் முடிவில் நாங்கள் சோதனைக்கு எடுத்துக் கொண்ட 30 பெண்களின், ரத்த உறவுகளான அம்மா அல்லது உடன்பிறந்த சகோதரிகளுக்கு புற்றுநோய் பரவலின் தாக்கம் முற்றிய நிலையில் இருந்தது உறுதியாகியது.

பொதுவாகவே புற்றுநோய் பரவல், ரத்த மரபணு சார்ந்து பரவும் ஒன்றாக இருந்தது. தற்போது ரத்த மரபணு மூலம் மார்பகப் புற்றுநோய் பரவுவது 18 – 20 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதியானால், சோதனைகள் மூலம் அவர்களின் ரத்த உறவில் இருக்கும் பெண்களை முன்கூட்டியே நாம் அலர்ட் செய்ய முடிகிறது.

மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்

மேலும் புற்றுநோய் பரவல் இருப்பது ஆரம்ப நிலையிலேயே உறுதியாகும் போது, அறுவை சிகிச்சை செய்து அவர்களை புற்றுநோயிலிருந்து விடுவிப்பதும், மார்பகத்தை மறு சீரமைப்பு செய்வதும் எளிதாகிறது. இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்தன. இப்போது இந்தியாவிலும் இதற்கான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

மார்பக, கர்ப்பப்பை மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய்கள் ஒருவருக்கு மரபணு மூலமாக பரவ 70 முதல் 80 சதவிகிதம் வரை வாய்ப்பிருக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியம். புற்று நோய் இருப்பது ஆரம்ப நிலையிலேயே கண்டறிப்பட்டுவிட்டால் அந்த இடத்தை மட்டும் நீக்கினால் போதும். முற்றிய நிலையில் இருந்தால் முழு மார்பகத்தையும் நீக்க வேண்டி வரும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானால், நீங்களும் புற்றுநோய்க்கான சோதனைகள எடுத்துக் கொள்வது நல்லது. மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் புற்றுநோய் மரபணு பரிசோதனைகளை ரூ. 10,000 முதல் ரூ. 15,000 கட்டணத்தில் செய்து கொள்ள முடியும். சிலவகை புற்றுநோய்களுக்கு தடுப்பூசிகளும் இருக்கின்றன. எனவே சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தால், புற்றுநோயிலிருந்து மீள்வது எளிது” என்றார்.

மார்பக புற்றுநோய்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்