நாட்டுக்காக போராட்டத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – கீதா குமாரசிங்க போராட்டக்காரர்களிடம் வலியுறுத்தல்

நாட்டை மீண்டும் அதள பாதாளத்திற்குள் தள்ளுவதற்காகவா ஒரு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் இடம்பெறும் வரையிலாவது போராட்டத்தை நாட்டுக்காக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

போராட்டம் தீவிரமடைந்தால் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளும் வருகை தர மாட்டார்கள், வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கப்பெறாது என மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

பொருளாதாரர் பாதிப்பின் நேரடி தாக்கத்தைக் குடும்பப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். தமது பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

2020-2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கையால் பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்தது, இதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களால் தற்போது நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் விலைகள் கட்டம் கட்டமாகக் குறைவடைந்து செல்கிறது. இதனைக் குடும்பப் பெண்கள் நன்கு அறிவார்கள்.

பாரிய போராட்டத்துக்குப் பின்னர் நாடு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. நாட்டை மீண்டும் அதளபாதாளத்துக்கு தள்ளும் வகையில் ஒரு தரப்பினர் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

இவர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள், வரி அதிகரிப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் மாதம் லட்சக்கணக்கில் ஊழியம் பெறுகிறார்கள். நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைவரும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்.

போராட்டத்தால் அரசாங்கத்தை மாற்ற முடியாது, ஆகவே ஜனநாயக ரீதியில் தேர்தல் இடம்பெறும் வரை தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தேர்தலில் தமக்கான அரசாங்கத்தை தாராளமாகத் தெரிவு செய்து கொள்ளலாம்,

நாட்டின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் தற்போது முன்னேற்றமடைந்து வருகிறது,இவ்வாறான சூழலில் நாட்டில் போராட்டம் தீவிரமடைந்தால் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தரமாட்டார்கள், வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கப் பெறா, ஆகவே, நாட்டைக் கருத்திற் கொண்டு தொழிற்சங்கத்தினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் போராட்டத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.