கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று வீடு திரும்பியுள்ளார்.

பிரித்தானியா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இரு வாரங்களுக்கு முன்பு இலக்கானார்.

இதனைத் தொடர்ந்து தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய அவர், வீட்டில் இருந்தவாறே அலுவலகக் கடமையை நிறைவேற்றி வந்தார்.

எனினும் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகமானதைத் தொடர்ந்து பொரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர மருத்துவக் கண்காணிப்பின்கீழ் சிகிச்சை பெற்றுவந்த பிரித்தானிய பிரதமரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டமையினைத் தொடர்ந்து, அவர் கடந்த வியாழக்கிழமை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கிருந்தவாறே அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்த பிரதமர், மருத்துவப் பணியாளர்களுக்கு தனது நன்றி போதுமானதாக இருக்காது எனவும் தனது உயிரினாலே அவர்களுக்கான நன்றிக் கடனை அளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இதையடுத்து, காணொளி ஒன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ள பொரிஸ் ஜோன்சன், “நான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளேன்.  தேசிய சுகாதார சேவைகள் அதிகாரிகள், ஊழியர்கள் எனது உயிரைக் காத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் போரிஸ் ஜோன்சன் சுகாதார சேவை ஊழியர்களைப் பாராட்டியிருப்பினும் பிரித்தானிய அரசாங்கத்தால் தமக்கு போதுமான சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என சுகாதார சேவை ஊழியர்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்