வங்கதேச கடலில் 2 மாதங்களாக தத்தளித்த 396 அகதிகள் மீட்பு: 32 பேர் உயிரிழப்பு

மலேசியாவுக்கு படகு வழியாக சென்றடையும் முயற்சியில் கடலில் தத்தளித்த 396 ரோஹிங்கியா அகதிகள், வங்கதேச கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் 32 அகதிகள் உயிரிழந்திருக்கின்றனர்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 396 அகதிகள் மோசமான- மிகவும் ஆள் நெருக்கடிமிக்க படகில் இரண்டு மாதங்களை கழித்ததாகக் கூறப்படுகின்றது. மீட்கப்பட்ட போது அகதிகள் மிகவும் சோர்வாக இருந்தாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஒரு புறம் மலேசியா அருகே இப்படகு சென்ற நிலையில் இரண்டு முறை திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் படகோட்டிகளுக்கும் அகதிகளுக்கும் சண்டை நடந்ததாகவும் ஓர் அகதி தெரிவிக்கிறார். இன்னொரு புறம், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மலேசியா இந்த அகதிகளை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகின்றது.

கடந்த பல ஆண்டுகளாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறும் ரோஹிங்கியா அகதிகள், மலேசியாவில் படகு மூலம் தஞ்சமடையும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது மீட்கப்பட்டவர்கள், மீன்படி படகில் வந்ததாகக் கூறும் வங்கதேச கடலோர காவல்படையின் பேச்சாளர் ஷா ஹியா ரகுமான், “அவர்கள் 58 நாட்கள் கடலில் தத்தளித்திருக்கின்றனர். கடந்த ஏழு நாட்களாக வங்கதேச கடல் எல்லைக்குள் இவர்கள் இருந்ததாக அறிகிறோம்,” எனக் கூறியிருக்கிறார்.

கரை ஒதுங்கிய அகதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் இருப்பதால், இவர்களிடையே இது வரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த அகதிகள் மோசமான உடல்நிலையுடன் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள ஐ.நா. அகதிகள் முகமை, தனிமைப்படுத்தப்படும் இடங்களுக்கு இந்த மக்களை நகர்த்த வங்கதேச அரசுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதே சமயம், ரோஹிங்கியா அகதிகள் படகு வழியாக வழக்கமாக தஞ்சமடையக் கூடிய நாடுகளாக உள்ள தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கொரோனா காரணமாக மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், மேலும் பல படகுகள் கடலில் இருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகின்றது.

மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் உயிர் அச்சுறுத்தலை சந்தித்துவரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள், பல ஆண்டுகளாக அந்நாட்டு வெளியேறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. ரோஹிங்கியா முஸ்லீம்களை குறிவைக்கும் வன்முறை சம்பவங்களை இனச்சுத்தரிகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை ‘இனச்சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம் இது’ என முன்பு குறிப்பிட்டிருந்தது.

இன்றைய நிலையில் சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் மலேசியா, இந்தியா போன்ற நாடுகளிலும் வசித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.