சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அவுஸ்ரேலியா – உலக சுகாதார நிறுவனத்துக்கு நேரடி அழைப்பு

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசாரணைகளில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுக்க வேண்டுமென அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் பல நாடுகளும் மனித மற்றும் பொருளாதார அழிவுகளை சந்தித்து வருகின்றன.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனாவை பல இறப்புகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும் பின்னாட்களில் சீனாவை காட்டிலும் ஏனைய நாடுகளிலேயே மனித மரணங்கள் அதிகம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக நாடுகள் பலவற்றின் சந்தேக பார்வை சீனா மீது விழ ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவல் சீனாவின் வுஹான் நகர ஆய்வுக்கூடங்களில் இருந்து பரவ ஆரம்பித்துள்ளதா என்ற கோணத்தில் அமெரிக்கா தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அத்துடன் சீனாவின் தலையீட்டுடன் குறித்த வைரஸ் பரவ ஆரம்பித்திருந்தால் சீனா பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இதேவேளை கொரோனா பரவல் குறித்த அமெரிக்காவின் விசாரணைகளுக்கு அவுஸ்ரேலியா வெளிப்படையாக தனது ஆதரவை வழங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொடர்பான விசாரணைகளில் உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுக்க வேண்டும் என அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஷன் இன்று (வியாழக்கிழமை) குறித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல உலக தலைவர்களுடனும் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடிய ஸ்கொட் மொஷசன், குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வழைப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “உலக சுகாதார நிறுவனம் போன்றதொரு அமைப்பில் அங்கத்தவராக இருக்க விரும்பினால் அதற்கான சில பொறுப்புகளும் கடமைகளும் உண்டு.

இந்த உலகம் இவ்வாறான வைரஸ் நெருக்கடிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். குறித்த இடத்தில் சீனவாகவோ அல்லது வேறு எந்த நாடாகவோ இருந்தாலும் இந்நோக்கத்தினை பகிர்ந்துகொள்ளும் என் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்