ஐரோப்பாவில், கொரோனாவிற்கான முதலாவது தடுப்பூசிப் பரிசோதனை, பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பாவில், கொரோனா வைரஸிற்கான முதலாவது தடுப்பூசி பரிசோதனை பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில் நேற்று வியாழக்கிழமை முதலாவது தடுப்பூசி முதல் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனையில், இரண்டு நோயாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன் 800க்கு மேற்பட்டவர்கள் இந்த ஆரம்ப பரிசோதனைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் அரைவாசிப்பேர் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவார்கள், மற்றய அரைவாசிப்பேர், மூளைக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியைப் பெறுவர். ஆனால் அது கொரோனா வைரஸிற்கானது அல்ல.

இந்த சோதனையின் வடிவமைப்பில் எந்த தடுப்பூசியை பெறுகிறார்கள் என்பதை, தன்னார்வலர்கள் அறிய மாட்டார்கள், இருப்பினும் மருத்துவர்கள் அதனை அறிந்திருப்பர்.

இந்தத் தடுப்பூசியை பெற்ற இருவரில் ஒருவரான எலிசா கிரனாடோ (Elisa Granato) பிபிசியிடம் கருத்து தெரிவிக்கையில், “நான் ஒரு விஞ்ஞானி, எனவே அறிவியல் செயல்முறை எங்கு இடம்பெற்றாலும் அதனை நான் ஆதரிக்க விரும்புவேன்.” எனக் குறிப்பட்டுள்ளார்.

இந்த தடுப்பூசி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுக் குழுவினரால் மூன்று மாதங்களுக்குள் உருவாக்கப்பட்டது. மருத்துவத்திற்கு முந்தைய ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய, ஜென்னர் இன்ஸ்டிடியூட்டின் தடுப்பூசி ஆராட்சிக்கான பேராசிரியர் சாரா கில்பர்ட், இது குறித்து தெரிவிக்கையில், “தனிப்பட்ட முறையில் இந்தத் தடுப்பூசி மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது,” எனக் கூறினார்.

“நிச்சயமாக, நாங்கள் அதை சோதித்து மனிதர்களிடமிருந்து தரவைப் பெற வேண்டும். இது உண்மையில் செயல்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டும், மேலும் பரவலான மக்களில் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு முன்பு மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதை நிறுத்துவதற்கான விளக்கங்களை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.”

இதேவேளை இந்தத் தடுப்பூசி குறித்து முன்பு கருத்து வெளியிட்ட, பேராசிரியர் கில்பர்ட் (Prof Gilbert), தடுப்பூசி வேலை செய்யும் என்பதில் “80% நம்பிக்கையே” இருப்பதாக கூறினார், ஆனால் இப்போது அதில் ஒரு புள்ளிவிவரத்தை இணைக்க விரும்பவில்லை, அதன் வாய்ப்புகள் குறித்து அவர் “மிகவும் நம்பிக்கையுடன்” இருப்பதாகக் கூறினார்.

இந்த தடுப்பூசி சிம்பன்ஸிகளிடமிருந்து பெறப்பட்ட குறைந்த வீரியமுள்ள குளிர் வைரஸில் (அடினோவைரஸ் என அழைக்கப்படுகிறது known as an adenovirus)) இருந்து தயாரிக்கப்பட்டது. இது மனிதர்களில் வளர்ச்சி அடைய முடியாதது.

இதே அணுகுமுறையைப் பயன்படுத்தி மற்றொரு வகை கொரோனா வைரஸான மெர்ஸுக்கு (Mers) எதிராக ஒரு தடுப்பூசியை ஒக்ஸ்போர்ட் ஆய்வுக் குழு ஏற்கனவே உருவாக்கியுள்ளது – மேலும் இது மருத்துவ பரிசோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கொண்டிருந்தது.
அடுத்த மாதங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை, இந்த சோதனையுடன் ஒப்பிடுவதன் மூலம, இந்தக் கோவிட் -19 தடுப்பூசி செயல்படுகிறதா என்பதை ஆய்வுக் குழு கண்டறிய ஒரே வழியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இதேவேளை பிரிட்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சியடைந்தால் அது ஒரு பிரச்சனையாக ஒப்பீடு செய்வது கடினமாக இருக்கலாம் எனவும்  போதுமான தரவு இல்லாமையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

இந்த நிலையில் பரிசோதனைக்கு தலைமை தாங்கும் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிக் குழுமத்தின் இயக்குனர் பேராசிரியர் அண்ட்ரூ பொல்லார்ட் (Prof Andrew Pollard) கருத்து தெரிவிக்கையில், ” நாங்கள் தற்போதைய தொற்று அலையை, முடிவுக்கு கொண்டுவர துரத்திக்கொண்டு இருக்கிறோம் . நாங்கள் அதைப் பிடிக்கவில்லை என்றால், அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி செயல்படுகிறதா? இல்லையா என்பதை நாங்கள் சொல்ல முடியாது அத்துடன் இந்த வைரஸ் நீங்காவிடின் எதிர்காலத்தில் அதிக பாதிப்புகள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களை சோதனைக்கு உட்படுத்துவதற்கே, தடுப்பூசி ஆராய்ச்சியாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர், ஏனெனில் மற்றவர்களை விட அவர்களே வைரஸை வெளிப்படுத்தக்கூடிய அதிக சந்தர்ப்பத்தைக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் சுமார் 5,000 தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு பெரிய சோதனை, எதிர் வரும் மாதங்களில் ஆரம்பமாகும் எனவும், இதற்கு வயது வரம்பு இருக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.