ஊரடங்கிற்கு மத்தியிலும் மாபியா குழுக்களுக்கிடையில் மோதல்: மெக்ஸிக்கோவில் 3,000பேர் உயிரிழப்பு!

மாபியா குழுக்களுக்கு பெயர்போன நாடுகளில் ஒன்றான வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் கடந்த மாதம் மட்டும் மூவாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், இவ்வாறான மோதலில் இவ்வளவு உயிர்கள் பறிபோயுள்ளமை அந்நாட்டு அரசாங்கத்தை அதிருப்தியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி ஓப்ரடார், ‘நாடு கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள நேரத்திலும் கூட இவர்களின் சண்டை ஓயாதது பெரும் கவலை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

மெக்ஸிகோவில் கடந்த 2 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் மாபியா குழுக்களைச் சேர்ந்த இவ்வளவு பேர் படுகொலை செய்யப்பட்டதில்லை.

சுமார் 13 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் 20இற்க்கும் மேற்பட்ட மாபியா குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு குழுவிலும் 900 பேர் வரை உறுப்பினர்களும் இருக்கின்றனர்.

இந்த கடத்தல் குழுக்களை ஒடுக்குவதற்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு இராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஆனால், இவர்களில் 18 ஆயிரம் பேர் தற்போது கொரோனா தடுப்பு பணி பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர். இதனால் 4 ஆயிரம் வீரர்கள் மட்டுமே மாபியா குழுக்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே மாபியா குழுக்களுக்கிடையிலான மோதலில் மூவாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்றால் அங்கு இதுவரை 1569பேர் மட்டுமே உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.