மரணித்து விட்டதாக சந்தேகிக்கப்படும் கிம் கடற்கரை பங்களாவில் தங்கியுள்ளதாக தகவல்

அமெரிக்க பிரதிநிதிகள் யாரும் அண்மைக்காலமாக வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை சந்திக்கவில்லை என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவைத் தளமாக கொண்ட புலனாய்வு ஊடகம் ஒன்றினால் வெளியிடப்பட்ட குறித்த தகவல் தொடர்பாக வட கொரிய அரச ஊடகங்கள் மெளனம் சாதித்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதிக்கு பின்னர் நேரடியாகவோ ஊடகங்கள் வாயிலாகவோ மக்களை சந்திக்காத வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னின் தொடர் மறைவானது உலகளாவிய ரீதியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, கடந்த சில மாதங்களாக அமெரிக்க பிரதிநிதிகள் யாரும் வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கிம் உடல் நிலை தொடர்பாக அமெரிக்கா மிகுந்த அவதானத்துடன் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கிம் தொடர்பான தகவல்கள் பொய்யானவை என தென் கொரியா மறுத்திருந்தது.

மேலும், வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வட கொரியாவின் வொண்சான் நகரில் உள்ள கடற்கரை பங்களாவில் தங்கியிருக்கலாம் எனவும் தென் கொரியா சந்தேகம் வெளியிட்டுள்ளது.

வட கொரிய அரசாங்கம் கொரோனா பெருந்திற்றில் இருந்து தனது நாட்டை பாதுகாத்துக்கொள்வதற்காக கடந்த ஜனவரி மாதமே அதன் எல்லைகள் யாவற்றையும் மூடியிருந்தது.

இந்நிலையில் வடகொரியாவின் நிலை தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பொம்பியோ, வட கொரியாவில் உணவுப்பற்றாக்குறையால் பஞ்சம் ஒன்று ஏற்படும் எனவும் அதுவே அந்நாட்டுக்கான உண்மையான நெருக்கடி எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.