அமெரிக்காவை புரட்டியெடுத்துவரும் கொரோனா- ஒரேநாள் உயிரிழப்பு 2500ஐத் தாண்டியது!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்காவைப் புரட்டியெடுத்துவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழப்புக்கள் 75 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 12 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது.

இதனைவிட அமெரிக்க நாடான பிரேஸிலில் முதன்முறையாக நேற்று ஒரேநாளில் 600இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.

உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் நேற்று மட்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான 95 ஆயிரத்து 325 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 38 இலட்சத்து 22 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட கடந்த இரண்டு வாரங்களைவிட நேற்றைய நாளில் அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன் 6 ஆயிரத்து 811 பேர் உலக நாடுகளில் மரணித்துள்ளனர். இந்நிலையில் மொத்த மரணங்கள் 2 இலட்சத்து 65 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட 38 இலட்சத்து 20 ஆயிரம் பேரில் இதுவரை 12 இலட்சத்து 99 ஆயிரத்து 262 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை 80 இலட்சம் பேரிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 12 இலட்சத்து 63 ஆயிரத்து 92 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 25 ஆயிரத்து 449 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 528 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 74 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலமே வைரஸ் பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நேற்றுமட்டும் 752 பேர் மரணித்துள்ளனர்.

அங்குமட்டும் இதுவரை 25 ஆயிரத்து 956 பேர் மரணித்துள்ளதுடன் 3 இலட்சத்து 33 ஆயிரத்து 491 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அடுத்து அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாநிலமான நியூ ஜெர்ஸியில் நேற்று அதிகபட்சமாக 280 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் அங்கு 8 ஆயிரத்து 572 ஆக அதிகரித்துள்ளன.

இதனைவிட, பென்சில்வேனியாவில் நேற்று 151பேர் மரணித்துள்ளதுடன், மஸ்ஸசுசெட்ஸ் மாநிலத்தில் 208 பேர் நேற்று மட்டும் மரணித்துள்ளனர்.

இதேவேளை, தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் கடந்த ஒருவார காலமாக அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நேற்றுமட்டும் அந்நாட்டில் 667 பேர் மரணித்துள்ளதுடன் இந்த எண்ணிக்கையே அங்கு ஒரே நாளில் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டில் மொத்த உயிரிழப்புக்கள் 8 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளன.

இதனைவிட, பிரேஸிலில் நேற்று மட்டும் 11 ஆயிரத்து 896 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து ஸ26 ஆயிரத்து 611ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் பெரும் மனித இழப்பை ஏற்படுத்திவருகின்ற வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்கள் கடந்த 10 நாட்களாகக் குறைந்துள்ள போதும் பிரித்தானியாவில் உயிரிழப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 529 பேர் மரணித்துள்ளனர். அத்துடன் குறித்த நாடுகளில் மொத்தமாக ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 631 பேர் இதுவரை மரணித்துள்ளனர்.

மேலும், நேற்று 30 ஆயிரத்து 931 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 15 இலட்சத்து 24 ஆயிரத்து 904 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்ட 15 இலட்சத்து 25ஆயிரம் பேரில் 5 இலட்சத்து 94 ஆயிரத்து 63 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள பிரித்தானியாவில் நேற்று ஒரேநாளில் 649 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மொத்தமாக 30 ஆயிரத்து 76 பேர் இதுவரை மரணித்துள்ளனர்.

இதேவேளை, அந்நாட்டில் நேற்று 6 ஆயிரத்து 111 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2 இலட்சத்து ஆயிரத்து 101 பேராகப் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இத்தாலியில் நேற்று மட்டும் 369 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மொத்த மரணங்கள் 29 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளன. மொத்த பாதிப்பு இதுவரை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 457 ஆகப் பதிவாகியுள்ளது.

இதனைவிட, ஸ்பெயினில் நேற்று மட்டும் 244 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 25 ஆயிரத்து 857ஆகப் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவை அடுத்து அதிகளவில் தொற்றுக்கு உள்ளானவர்கள் பதிவாகிய நாடாக ஸ்பெயின் பதிவாகியுள்ளது.

அங்கு நேற்று 3 ஆயிரத்து 121 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 682 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 359 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுவந்த பிரான்ஸில் மரணங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

அந்தவகையில், அந்நாட்டில் நேற்று 278 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 25 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டில் நேற்று புதிய தொற்றாளர்கள் 3 ஆயிரத்து 640 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஜேர்மனியில் இதுவரை ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 162 பேர் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு இலட்சத்து 37 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்புக்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நாடாக உள்ளபோதும் ஜேர்மனியில் நேற்று அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

அங்கு நேற்று மட்டும் 282 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்புக்கள் 7 ஆயிரத்து 275 ஆகக் காணப்படுகின்றது.

இதையடுத்து, ரஷ்யாவில் கடந்த இரண்டு வார காலமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதுடன் நேற்றும் 10ஆயிரத்து 559 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அங்கு வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 929ஆக அதிகரித்துள்ளன. அந்நாட்டில் நேற்று 86 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளன.

இதையடுத்து, மற்றொரு அமெரிக்க நாடான கனடாவில் நேற்றுமட்டும்189 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 4 ஆயிரத்து 232 ஆக அதிகரித்துள்ளதுடன் மொத்த பாதிப்பு 63 ஆயிரத்து 496 ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஆசிய நாடுகளில் நேற்று 357 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் அதிகபட்சமாக இந்தியாவில் நேற்றுமட்டும் 92 பேர் மரணித்துள்ளனர். அத்துடன் அந்நாட்டில் 52 ஆயிரத்து 987பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஆசிய நாடுகளில் துருக்கியில் 64 பேரும் ஈரானில் 78 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் நேற்று இருவருக்கு மட்டுமே வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்கள் பதிவாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.