சீனா- தென் கொரியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை (கொவிட்-19) கட்டுப்படுத்துவதில், 90 சதவீதமான வெற்றியை கண்ட சீனா மற்றும் தென்கொரியாவில், மீண்டும் வைரஸ் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது.

கொரோனா வைரஸின் தாயகம் என கூறப்படும் சீனாவில், வைரஸ் பரவல் பெரிதளவில் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு நடைமுறையில் இருந்த முடக்கநிலை தளர்த்தப்பட்டது.

இதனால், மில்லியன் கணக்கானோர் மீண்டும் பணிக்கு திரும்பினர். பாடசாலைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

ஆனால், தற்போது மீண்டுமொரு முடக்கநிலையை அமுல்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தை கொரோனா வைரஸ், சீன மக்கள் மனதில் விதைத்துள்ளது.

சீனாவில் கடந்த பத்து நாட்களுடன் ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி, சீனாவில் புதிதாக 14பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 12பேருக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உள்நாட்டு தொற்றுகளில் 11பேர் வடகிழக்கு மாகாணமான ஜிலினில் உள்ளவர்கள் ஆவர். மேலும் ஒருவர் ஹூபே மாகாணத்தில் அடையாளங்காணப்பட்டுள்ளார்.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 82,901பேர் பாதிப்படைந்துள்ளனர். 4,633பேர் உயிரிந்துள்ளனர்.

இதேபோல கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் முதன்மை நாடாக கருதப்பட்ட தென்கொரியாவுக்கு, கடந்த 24 மணித்தியால பாதிப்பு புள்ளிவிபரம், மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

தென்கொரியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 34பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதில் 26 பேர் உள்நாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு மாதத்தில் தென் கொரியாவின் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள், 30இற்க்கு மேல் அதிகரிப்பது இதுவே முதல்முறை.

தென்கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10,874பேர் பாதிப்படைந்துள்ளனர். 256பேர் உயிரிந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்