கொவிட்-19 முடக்கநிலையால் இளைஞர்கள் பெரும்பாலும் வேலையை இழக்கநேரிடும்! ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையான முடக்கநிலையால், இளைஞர்கள் பெரும்பாலும் வேலையை இழக்கநேரிடும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

18 முதல் 24 வயதுடையவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மேற்பட்டோர், முடக்கநிலைக்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என சுயாதீனமான பிரித்தானிய சிந்தனைக் குழுவான Resolution Foundation மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இளைய தொழிலாளர்களின் ஊதியம் பல ஆண்டுகளாக பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

18-24 வயதுடைய ஊழியர்களில் 23 சதவீதமானோர் தற்காலிக விடுப்பில் இருப்பதாகவும், 9 சதவீதமானோர் தங்கள் வேலையை முழுவதுமாக இழந்துவிட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் குறைவான வேலைகள் அல்லது வேலைகளை இழந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக இளைய ஊழியர்கள் பப்கள், உணவகங்கள் மற்றும் ஓய்வு நிலையங்கள் போன்றவற்றிலேயே பணிபுரிகின்றனர். இங்கு எட்டு வாரமாக முடக்கநிலை தொடருகின்றன. இதனால், எல்லா வயதினர் ஊழியர்களும் ஜனவரி மாதத்தில் சம்பாதித்ததை விட குறைவாகவே சம்பாதித்துள்ளனர்.

இதுகுறித்து Resolution Foundation இன் ஆராய்ச்சியாளர் மஜா குஸ்டாஃப்ஸன் கூறுகையில், ‘தற்போதைய நெருக்கடியில் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை எங்கள் ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. மூன்று இளைஞர்களில் ஒருவர் விடுப்பில் அல்லது வேலையை முற்றிலுமாக இழந்துவிட்டார், நெருக்கடி தொடங்கியதிலிருந்து மூன்றில் ஒருவருக்கு மேல் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

ஆண்டின் முதல் காலாண்டிற்கான உத்தியோகபூர்வ வேலையின்மை புள்ளிவிபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.