பெருகும் கொரோனா தொற்று: ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் உள்ள அகதிகளின் நிலை என்ன

பப்பு நியூ கினியா எனும் தீவு நாட்டில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளின் பாதுகாப்பை ஆஸ்திரேலிய அரசு உறுதிச் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் சட்ட மையம் வலியுறுத்தியுள்ளது.

பப்பு நியூ கினியாவில் கொரோனா தொற்று பரவினால் அது அந்நாட்டில் உள்ள சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கூடும் என பப்பு நியூ கினியாவின் பெருந்தொற்று கட்டுப்பாட்டாளர் எச்சரித்துள்ள நிலையில் அங்குள்ள அகதிகளின் நிலைக்குறித்து அச்சம் எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில், பப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலிய முகாமில் 175 அகதிகளும் நவுருத்தீவு முகாமில் 185 அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரு வாரங்களாக, அகதிகள் வைக்கப்பட்டுள்ள பப்பு நியூ கினியாவின் தலைநகரான Port Moresby-ல் வேகமாக கொரோனா தொற்று பரவி வருகின்றது.

முன்னதாக, கொரோனா பரவலை பப்பு நியூ கினியாவின் சுகாதார கட்டமைப்பைக் கொண்டு கையாள்வது போராட்டம் மிகுந்ததாக இருக்கும் என பப்பு நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே எச்சரித்திருந்தார்.

பல ஆண்டுகள் தடுப்பில் கழித்த நாங்கள் கொரோனா தொற்றால் எளிதாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழ் அகதியான ஷமிந்தா கணபதி.

உடல்நல, மனநலப் பாதிப்பிற்கான முறையான மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் அகதிகளின் ஆரோக்கியம் மோசமான நிலையில் உள்ளதாகக் கூறுகிறார் கணபதி.

கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசே பொறுப்பு எனக் கூறியுள்ள மனித உரிமைகள் சட்ட மையத்தின் டேவிட் பூர்க், “(அகதிகளை) பராமரிக்கும் கடமை பெருந்தொற்று சூழலில் தவிர்க்கப்படக் கூடாது. இந்த பொது சுகாதார நெருக்கடியில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள மக்கள் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருக்க தகுதிவாய்ந்தவர்கள்,” என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.