ஆங்கில கால்வாய் வழியாக ஐக்கிய இராச்சியத்தை நோக்கி வரும் குடியேறிகள், அகதிகள்: ஆஸ்திரேலிய பாணியில் தடுக்க வலியுறுத்தல் ..

சட்டவிரோத பாதைகள் வழியாக குடியேறிகள் ஐக்கிய இராச்சியத்துக்குள் நுழைவதைத் தடுக்க ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேக்கப் யெங் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்துக்குள் வர முயலும் அதிகப்படியான சிறிய சட்டவிரோத படகுகளை தடுப்பதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் எடுக்கும் முயற்சிகளை வரவேற்றுள்ள அவர், பிரான்சிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்குள் வரும் போலி தஞ்சக்கோரிக்கையாளர்களின் தஞ்சக்கோரிக்கையை நிராகரித்து அவர்களை உடனடியாக பிரான்சுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய இராச்சியத்துக்குள் வரும் சிறிய படகுகள் சட்டவிரோதமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை, பாதுகாப்பற்றவை. சமீபத்தில், படகில் கடக்க முயன்றவர்கள் எதிர்கொண்ட விபத்தின் மூலம் அது எவ்வளவு  மோசமான பயணம் என்பதை காண்கிறோம்” எனக் கூறியுள்ளார ஜேக்கப் யெங் .

“இந்த விவகாரத்தில், (ஐக்கிய இராச்சிய) அரசு ஆஸ்திரேலிய பாணியை பின்பற்ற வேண்டும் என விரும்புகிறேன். அதாவது, ஆஸ்திரேலியா செய்வது போல சட்டவிரோத நுழைவுகளை தடுத்து, தனிநபர்களை பாதுகாத்து, அவர்கள் வந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டுக்குள் வர முயல்பவர்களுக்கு ‘அவர்களது தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்’ எனும் செய்தியை கொண்டு செல்ல வேண்டும்,” ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேக்கப் யெங் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கு இடையே உள்ள ஆங்கில கால்வாய்(English Channel) வழியாக படகு மூலம் ஐக்கிய இராச்சியத்தில் குடியேறிகளும் அகதிகளும் தஞ்சமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேக்கப் யெங்கின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.