சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி ! யுத்தம் தொடர்கிறது !! – பிரதமர் வி.உருத்திரகுமாரன்…

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என வெளிவந்துள்ள ஆணையத்தின் தீர்ப்பு என்பது, சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இறுதிவெற்றி நோக்கி சட்டயுத்தம் தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையத்தின் முன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்துரைக்கும் பொழுதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில், இந்த விசேட தீர்பாயத்தின் கடந்த 20 வருட வரலாற்றில் இது இரண்டாவது வழக்காகும். இந்த வழக்கினை முழுமையாக நடத்தியமைக்கு எங்களை நாமே முதுகில் தட்டிக் கொள்ளலாம்.

எமது இலக்கினை நோக்கி அரசியல்ரீதியான வெற்றியினை அடைவதற்கு, சட்டரீதியான இப்போராட்டத்தின் முதல்கள வெற்றியை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்த வேண்டும். சட்டயுத்தம் தொடர்கின்றது.

எந்தவொரு அநீதியான சக்தியாலும், எவ்வளவு பலமிக்க சக்தியாக இருந்hதலும் கூட, அதனை எதிர்த்து போராடும் வல்லமை தமிழ் தேசிய இனத்துக்கு உண்டு என்பதனை நாம் நிறுவியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

நிகழ்காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகள் இருக்கிறதா என்றே சட்டம்    பார்கின்றது. கூறுகின்றது. குறிப்பாக கடந்த 18 மாதங்கள் என்ன நடந்தது என்றே சட்டம்  பார்கின்றது. அந்தவகையில் விடுதலைப்புலிகள் மீது பிரித்தானிய உள்துறை அமைச்சு விதித்திருந்த தடைக்கான காரணங்கள் வலுவாக இல்லை என இத்தீர்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய உள்துறை அமைச்சின் தடையினை நீக்குகின்ற அதிகாரம் இந்த தீர்ப்பாயத்துக்கு இல்லாதுவிட்டாலும், பிரித்தானிய அரசாங்கத்துக்கு இதுவொரு அரசியல் சவாலாக இருக்போகின்றது.
தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையத்தின் இத்தீர்பின் அடிப்படையில் அரசியல்ரீதியான கொள்கை முடிவினை பிரித்தானிய அரசு எடுக்க வேண்டும். குறிப்பாக பாராளுமன்றத்தின் ஊடாக தடையினை நீக்க வேண்டும்.

குறிப்பாக பிரித்தானிய அரசு தரப்பு, மனுதாரர் தரப்பு, ஆணையம் வழக்கு விசாரணைக்காக நியமித்த வழக்கறிஞர் ஆகியோரின் கருத்துகள், அடுத்து வருகின்ற 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இதன் ஒவ்வொரு கட்டங்களையும் எதிர்கொண்டவாறு இச்சட்டப்போராட்டத்தின் இறுதி வெற்றியினை நோக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது சட்டப்போராட்டத்தினை தொடரும் என உறுதிபட பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்