டுபாயில் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று உரை..

 அடுத்த மாதம் டுபாயில் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.

மலாலா யூசப்சையி (வயது 23) கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி பாகிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரில் தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் பாடசாலைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இவர் தனது 12 வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் திகதி ஒரு பெண்ணாக பாடசாலைக்கு சென்றதால் தலிபான் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இந்த சம்பவம் அவர் ஒரு போராளியாக மாற வித்திட்டது. அதன்பின் லண்டனில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு உலக அளவில் பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காக இளம் வயதில் போராட ஆரம்பித்தார். இதற்காக தன் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவினார். தொடர்ந்து அவருக்கு 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் சார்பில், டுபாய் கலாசாரம் மற்றும் கலை ஆணையத்தின் ஆதரவுடன் இலக்கிய திருவிழா நடத்தப்பட உள்ளது. வரும் ஜனவரி 29ஆம் திகதி ஜமீல் கலை மையத்தில் தொடங்கும் இந்த விழா பெப்ரவரி 13ஆம் திகதி அல்செர்கல் அவென்யூ வளாகத்தில் நிறைவடைகிறது.

இந்த விழாவில் இந்திய எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் சத்யார்த் நாயக் கலந்துகொண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து பேசுகிறார். மேலும் புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண் நாவலாசிரியர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அவ்னி தோஷி உள்ளிட்ட பல்வேறு படைப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக நோபல் பரிசு பெற்ற இளம்பெண் மலாலா கலந்துகொண்டு பேசுகிறார். இதில் உலக அளவில் பெண்களின் நிலை, அவர்களது முன்னேற்றம் மற்றும் கல்வி குறித்து உரையாடலை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.