விதை அளவே உடல்; உலகின் மிகச் சிறிய ஊர்வன இன விலங்கு கண்டுபிடிப்பு!

உலகிலேயே மிகச் சிறிய ஊர்ந்து செல்லும் உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பச்சோந்தி இனத்தின் உள்ளினத்தை சேர்ந்த அந்த உயிரினம் ஒரு விதையின் அளவுக்குத் தான் இருக்கிறது.

அப்படிப்பட்ட இரண்டு பல்லிகளை ஜெர்மனி மற்றும் மடகாஸ்கரைச் சேர்ந்த விஞ்ஞானிகளைக் கொண்ட ஆய்வுக் குழு ஒன்று மடகாஸ்கரில் கண்டுபிடித்துள்ளது.

ஆண் ப்ரூகேசியா நானா அல்லது நானோ பச்சோந்தி என்று அழைக்கப்படும் அவற்றின் உடலின் நீளம் வெறும் 13.5 மில்லி மீட்டர் தான் இருக்கிறது.

எனவே, ஜெர்மனியின் முனிச் நகரத்தில் இருக்கும், ‘பவாரியன் ஸ்டேட் கலெக்‌ஷன் ஆஃப் சுவாலஜி’ என்கிற அமைப்பின் படி, 11,500 ஊர்ந்து செல்லும் உயிரினத்தில், இந்த நானோ பச்சோந்தி மிகவும் சிறிய உயிரினம் என்கிற இடத்தைப் பிடிக்கிறது என்கிறது இதை கண்டறிந்த ஆய்வுக்குழு.தலை முதல் கால் வரையில் இவற்றின் மொத்த நீளமே 22 மில்லி மீட்டர்தான். பெண் பச்சோந்தி இதை விட கூடுதல் நீளம் கொண்டதாக, 29 மில்லிமீட்டர் நீளத்தோடு இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

“இந்த நானோ பச்சோந்திகளின் வாழ்விடம் காடழிப்புக்கு இலாக்காகி இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த உயிரினம் வாழும் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டதால், இனி இவை அங்கு தொடர்ந்து வாழும்” என ஹாம்பெர்க்கில் உள்ள ‘சென்டர் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி’ என்கிற அமைப்பைச் சேர்ந்த ஆலிவர் ஹாலிட்ஸ்செக் என்கிற விஞ்ஞானி கூறியுள்ளார்.

இந்த பச்சோந்தி, மழைக்காடுகளின் தரையில் மைட்ஸ் எனப்படும் சிறிய பூச்சிகளை வேட்டையாடுகிறது. எதிரிகளால் வேட்டையாடப்படாமல் இருக்க, புற்களுக்கு மத்தியில் மறைந்து கொள்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

“இந்த ப்ரூகேசியா உயிரினம் வாழும் வனப் பகுதி, அத்தீவின் வடக்குப் பகுதி முழுக்க மற்ற வனப் பகுதிகளோடு நன்றாகவே இணைந்திருக்கிறது” என்கிறார் இந்த உயிரினம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட மற்றொரு விஞ்ஞானியான மார்க் செர்ஸ்.
“இந்த புதிய சிறிய நானோ பச்சோந்தி, தீவில் இருக்கும் மிகச் சிறிய உயிரினங்களுக்கான வடிவங்களை மீறி இருக்கிறது. வேறு ஏதோ விஷயம் தான் இந்த நானோ பச்சோந்தியை இத்தனை சிறியதாக இருக்க அனுமதிக்கிறது” என்றார் மார்க்.

பச்சோந்திகள் விரைவில் அழியக் கூடிய உயிரினங்களில் ஒன்றாக இருக்கிறது என ‘இன்டர்நேஷ்னல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர்ஸ்’-ல் பட்டியலிடப்பட வேண்டும், அதையும் அதன் வாழ்விடங்களையும் பாதுகாக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தங்கள் அறிக்கைகளில் கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.