ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைவு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகவும் போதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மனித உரிமை பேரவையில் இருந்து வெளியேறி மூன்று ஆண்டுகளின் பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி ஒரு கண்காணிப்பாளராக ஜெனீவாவை தளமாகக் கொண்ட பேரவைக்கு அமெரிக்கா திரும்பவுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டோனி பிளின்கன் நேற்று அறிவித்தார். “பேரவையை சீர்திருத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கொள்கை ரீதியாக ஈடுபடுவதே சிறந்த வழி என்பதை அறிந்து செயற்பட நாம் உத்தேசித்துள்ளோம்” என்று இராஜாங்க திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பொதுச் சபையினால் பேரவையின் புதிய உறுப்பு நாடுகள் இந்த ஆண்டு இறுதியில் தேர்வு செய்யப்படவுள்ளன.

 

மூன்று ஆண்டு தவணைக்காகவே உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்படவுள்ளதோடு தொடர்ச்சியாக இரண்டு தவணைக்கு மேல் அதன் அங்கத்துவத்தை பெற முடியாது.

அனைத்து பிராந்தியங்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யும் வகையில் பூகோள குழுக்களாக பிரிக்கப்பட்டே இரகசிய வாக்கெடுப்பு மூலம் உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்படும்.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வு இந்த மாத பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்