திரைப்படம் போன்று செய்தி வெளியிடுகின்ற இந்திய ஊடகங்கள்.

திரைப்படம் போன்று செய்தி வெளியிடுகின்ற இந்திய ஊடகங்கள். அதனை பிரதி பண்ணும் எம்மவர்கள். ஆப்கான் விவகாரம் இதற்கு சான்று.    

இந்திய மக்கள் மிகவும் நல்லவர்கள், அன்பானவர்கள். இவ்வாறான மக்களை யூடியூப் சனல் மூலம் பணம் சம்பாதிக்கின்ற சில கும்பல்கள் ஊடகம் என்று காண்பித்துக்கொண்டு மக்கள் மனதில் பொய்களை விதைக்கின்றார்கள். இதன் தாக்கம் இலங்கையிலும் பிரதிபலிக்கிறது. அதாவது இவர்களது வதந்திகளை பிரதி பண்ணி இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிடுகின்றன.

அண்மையில் ஆப்கானை போராளிகள் கைப்பற்றியபோது, திரைப்படங்களில் காஸ்மீர் தீவிரவாதிகளை அழிக்கின்ற சினிமா பாணியில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுவருகின்ற சில பொய்யான தகவல்களை காண்கின்றோம்.

ஆப்கானிலிருந்து தப்பிச்செல்லும்பொருட்டு போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதற்காக போராளிகளை அமெரிக்காவின் கைக்கூலிகள் என்று வர்ணித்தார்கள்.

அமெரிக்க படைகள் கட்டம் கட்டமாக ஆப்கானைவிட்டு வெளியேறிய இடங்களை போராளிகள் கைப்பற்றினார்கள். அதற்கு ஈரான் இராணுவத்தினர் ஒன்னரை இலட்சம் பேர் ஆப்கான் எல்லையில் குவிக்கப்பட்டதாகவும், ஆப்கானுக்குள் எந்தநேரமும் ஊடுருவி தலிபான்களை அழிக்க ஈரான் தயாராகி வருவதாகவும், மற்றும் ஆப்கான் இராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தானுக்குள் தலிபான்கள் தப்பி ஓடியதாகவும், மேலும் ரஷ்ய படைகள் ஆப்கானின் வடக்கு பக்கம் ஊடுருவி தலிபான்களை தாக்குவதற்கு தயாராகி வருவதாகவும் அவ்வப்போது செய்தி வெளியிட்டார்கள்.

பின்பு தலைநகர் காபூலை ஆப்கான் போராளிகள் கைப்பற்றியபோது அது ஹக்காணி குழுதான் கைப்பற்றியது என்றும், இந்த குழுவுக்கும் தலிபான்களுக்கும் பிரச்சினை உள்ளதாகவும், இதில் இந்த குழுவின் கை ஓங்கும் என்றும் செய்தி வெளியிட்டார்கள். இங்கே ஹக்காணி என்பவர் தலிபான் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவர். அவரை பிரித்துக் காண்பிக்க முயற்சித்தது இந்த ஊடகங்கள். தற்போது அவர் ஆப்கான் உள்நாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காபூல் விமான நிலையத்துக்கு அருகாமையில் அமெரிக்க படைகளை இலக்குவைத்து ஐ.எஸ்.கே அமைப்பினர் குண்டு தாக்குதல் நடாத்தினர். அதற்கு ஐ.எஸ்.கே இயக்கம் காபூலில் செல்வாக்கு செலுத்துவதாகவும், தாலிபான்களிடமிருந்து ஆப்கானை கைப்பற்றும் பலம் அவர்களிடம் உள்ளதாகவும் செய்தி வெளியிட்டார்கள்.

அமெரிக்க படைகள் ஆப்கானைவிட்டு முழுமையாக வெளியேறிய பின்பு பஞ்சசீர் மாகாண விடையத்தை கையிலெடுத்தார்கள். அதாவது பஞ்சசீர் மாகாணத்தில் உள்ள வடக்கு முன்னணியை தலிபான்களால் நெருங்க முடியாதென்றும், வடக்கு முன்னணினர் முன்னேறிச்சென்று காபூலை கைப்பற்றி பின்பு ஆப்கான் முழுவதையும் கைப்பற்றும் போர் ஆற்றல் உள்ளதாகவும், இதற்கு ரஷ்யா உதவி செய்வதாகவும் செய்தி வெளியிட்டார்கள்.

பின்பு பஞ்சசீர் மாகாணத்துக்குள் ஊடுருவி அதன் பிரதேசங்களை கைப்பற்ற தொடங்கியதும், அதற்கு பாகிஸ்தான் படைகள் தலிபான்களுடன் இரண்டர கலந்து போர் செய்வதாகவும், இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் செய்தி வெளியிட்டார்கள்.

தற்போது முட்டையில் மயிர் பிடுங்குவதுபோன்று அங்கு பெண்கள் உரிமை கோரி தலிபான்களுக்கெதிராக ஆர்பாட்டம் நடாத்துவதாக செய்தி வெளியிடுகின்றார்கள். அதில் ஒன்றை மறந்துவிட்டார்கள். அதாவது கொலைகாரர்களாக காண்பித்த தலிபான்களின் ஆட்சியில் ஆர்பாட்டம் செய்ய முடியுமென்றால், அங்கு ஜனநாயகம் உள்ளது என்பதுதான் அவர்கள் மறந்த செய்தி.

அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் சுதந்திரத்துக்காக நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையில் எவ்வாறு போராட்டம் நடாத்தினார்களோ, அதேபோல் இன்றைய நவீன காலகட்டத்தில் தங்களது நாட்டை ஆக்கிரமித்துக்கொண்ட வெளிநாட்டு படைகளை வெளியேற்றி சுதந்திரம் பெறுவதற்காக இருபது வருடங்கள் தொடர்ந்து போராடி, இறுதியில் உலகின் பிரதான வல்லரசுகளை விரட்டிவிட்டு ஆக்கிரமிப்பிலிருந்து தங்களது சொந்த மண்ணை மீட்டு வெற்றிபெற்றார்கள் என்ற உண்மையை எந்தவொரு இந்திய ஊடகங்களும் மக்களுக்கு கூறவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.