ஆப்கானில் பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்த தலிபான்களின் அனுமதி தேவையில்லை: அமெரிக்கா?

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கான் போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பீ கூறுகையில்,’பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு உள்ளது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதுவரை, ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்த எங்களுக்கு தலிபான்களின் அனுமதி தேவைப்படவில்லை.
இனி வரும் காலங்களிலும் ஆப்கான் வான் எல்லையைப் பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களிடமிருந்து நாங்கள் அனுமதி பெறத் தேவையில்லை’ என கூறினார்.

இதனிடையே ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், காபூல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டதாகவும், முன்பு போல அனைத்து விமானங்களையும் இயக்க விமான நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் தலிபான் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்