கொரோனா ஊரடங்கால் வேலைகளை இழந்த அகதிகள் …

ஆஸ்திரேலியா: கொரோனாவை சமாளிக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிறந்த வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக பல்வேறு விதமான உளவியல் சிக்கல்களையும் பொருளாதார பிரச்னைகளையும் உருவாகியுள்ளதை மறுக்க இயலாது.

அந்த வகையில், மெல்பேர்ன் வடக்கு பகுதியில் வசிக்கக்கூடிய அகதிகள் கடும் வேலை இழப்புகளையும் சந்தித்து உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர்களில் பெரும்பாலானோர் சேமிப்புக் கிடங்குங்கள், கட்டுமானத் துறை, டெலிவிரி சேவைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதால் ஊரடங்கு காலத்தில் அகதிகள் தொற்று பாதிப்பிற்கும் வேலை இழப்புகளுக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஊரடங்கினால் திறன்வாய்ந்த துறைகளில் பணி தேடும் அகதிகளும் வேலையின்றி தவிக்கும் நிலை உள்ளது.

முகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவ்வாறான அகதிகளில் ஒருவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் வேலைவாய்ப்பைப் பெறுவதில் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த முகமது ஒரு முதுகலை பட்டதாரி, திறன்வாய்ந்த பொறியாளர். ஆனால், ஆஸ்திரேலியாவில் பணி அனுபவம் இல்லாமையினாலும் ஆஸ்திரேலியாவில் அவரது பொறியியல் படிப்பு அங்கீகரிக்கப்படாமல் உள்ளதாலும் அவர் ஒரு வேலையைப் பெறுவதில் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்.

ஒரு தருணத்தில், புலம்பெயர்வு உதவி மையத்தின் உதவியுடன் ஒரு பொறியியல் நிறுவனத்தில்  பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த ஏப்ரல் 2020ல் ஏற்பட்ட கொரோனா முதல் அலை அவரது வாய்ப்பினைப் பறித்திருக்கிறது.

இதனால், முகமது தனது நிலையைக் குறைத்துக்கொண்ட தற்போது ஒரு சேமிப்புக் கிடங்கில் வேலையினைப் பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் தொடரும் கொரோனா சூழலினால் நாடெங்கும் வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக, அகதிகள் வேலைகளைப் பெறுவது மேலும் சிக்கலுக்குரியதாக மாறியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்