எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் – பாப்பரசர் கோரிக்கை

கிளாஸ்கோவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள், எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ள சவால்களை தொலைநோக்கு மற்றும் தீவிரமான முடிவுகளுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் அசாதாரண தன்மையின் அச்சுறுத்தலில் இருந்து மீள சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பாப்பரசர் பிரான்சிஸ் விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

பாரிசில் இடம்பெற்ற காலநிலை மாநாட்டில் பூகோள ரீதியாக 1.5 பாகை செல்சியசாக மட்டுப்படுத்த இணக்கம் காணப்பட்ட போதிலும், அது உரிய முறையில் அமுல்ப்படுத்த தவறியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக அமெரிக்காவும் சீனாவுமே அதிக அளவில் சுற்றாடல் மாசுபடும் வகையிலான வாயுக்களை வெளிப்படுத்தும் நாடுகளாக திகழ்வதனால், அந்த நாடுகள் அதனை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

அதேவேளை, அடுத்த வாரம் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள காலநிலை மாற்ற மாநாட்டில் பாப்பரசர் பிரான்சிஸ் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என வத்திக்கான் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்