உழவர்களுக்கான கடன் அட்டை திட்டத்தில் மீனவர்கள் சேர்க்கப்படுவார்களா? வைகோ கேள்வி; அமைச்சர் விளக்கம்

கீழ்காணும் கேள்விகளுக்கு, நிதி அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. உழவர்களுக்கான கடன் அட்டையை (கிசான் கிரிடிட் கார்டு), அனைத்து மீனவர்களுக்கும் வழங்க, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்.

3. அந்தத் திட்டத்தில், மீனவர்களுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் செய்யப்படுமா?

4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்.

நிதித்துறை இணை அமைச்சர் பக்வத் கராட் அளித்த விளக்கம்

1 முதல் 4 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்திற்கான செயல்பாட்டு மூலதனம் என்ற தலைப்பில், கருவூல வங்கி (ரிசர்வ் பேங்க்), 2019 பிப்ரவரி 4 ஆம் நாள் அனுப்பிய சுற்று அறிக்கையில், உழவர்களுக்கான கடன் அட்டையை, நாடு முழுமையும் உள்ள அனைத்து மீனவ உழவர்களுக்கும் வழங்குவதற்கு ஏற்பு அளித்து இருக்கின்றது.

ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட, உழவர்களுக்கான கடன் அட்டை செறிவூட்டல் இயக்கத்தின் கீழ், 2.68 கோடி உழவர்கள் (கால்நடை வளர்த்தல், பால்வளம் மற்றும் மீனவ உழவர்கள்) உழவர்களுக்கான கடன் அட்டை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்குக் கடன் உதவிகள் வழங்குவதற்காக, 2.85 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.

கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீனவ உழவர்களுக்குக் கடன் வழங்கும் நடைமுறைகளை மேலும் சீராக்குவதற்காக, ஒரு நிலையான செயல்பாட்டு முறை (Standard Operating Procedure-SoP), 2021 செப்டெம்பர் 24 ஆம் நாள் வகுக்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ், ஆகக்கூடுதலான உழவர்கள், மீனவ உழவர்களை இணைக்கும் பொருட்டு, செறிவூட்டல் திட்டத்தின் கீழ்,  3 மாத, வாரந்தோறும் பரப்புரைத் திட்டத்தை, 2021 நவம்பர் 15 ஆம் நாள் அரசு தொடங்கி இருக்கின்றது. அந்தப் பரப்புரைகளின்போது, விவசாயிகள் விண்ணப்பங்களை வழங்குவதற்கு ஏதுவாக, சரிபார்ப்புப் பட்டியலும் (checklist) இறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்