அவுஸ்திரேலியா – இந்தியாவுக்கிடையிலான இருபதுக்கு – 20 போட்டி இன்று ஆரம்பம்

சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் ஐசிசி தரநிலை வரிசையில் முதல் இடத்தை வகிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் மொஹாலியில் இன்று இரவு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த இரண்டு அணிகளும் தத்தமது பலத்தை இந்தத் தொடர் மூலம் பரீட்சிக்கவுள்ளன.

இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இரண்டு அணிகளாலும் பெயரிடப்பட்டுள்ள வீரர்களுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமானதாக அமையவுள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ணத்துக்கு அதிசிறந்த வீரர்களை 2 அணிகளும் தயார் செய்யவுள்ளன.

இந்தியா தனது சொந்த மண்ணில் தனது இரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதால் இது அந்த அணிக்கு அனுகூலமாக அமையும் என நம்பப்படுகிறது. கடந்த காலங்களிலும் அது நிரூபணமாகியுள்ளது.

Virat Kohli and Bhuvneshwar Kumar share a light moment as Paras Mhambrey watches on, India vs Australia, Mohali, September 19, 2022

அதேவேளை, இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் தனது அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவுஸ்திரேலியா முயற்சிக்கவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறிய இந்தியா, ஆசிய கிண்ணப் போட்டியில் விளையாடியவர்களில் 95 வீதமானவர்களுடன் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

மறுபுறத்தில் அவுஸ்திரேலியா கடைசியாக கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடிய தொடரில் ஈட்டிய 2 – 1 என்ற ஆட்டங்கள் கணக்கிலான வெற்றியுடன் இந்தியாவை சந்திக்கவுள்ளது.

ஆசிய கிண்ணத்தில் சில போட்டிகளில் பிரகாசித்த ரோஹித் ஷர்மா தொடர்ந்து இந்திய அணித் தலைவராக, கே. எல். ராகுலுடன் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக விளையாடவுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ணப் போட்டியில் தனது முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் சதத்தைப் பெற்ற விராத் கோஹ்லி 3ஆம் இலக்க வீரராக இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Adam Zampa and Daniel Vettori have a chat during training, India vs Australia, Mohali, September 19, 2022

சூரயகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் துடுப்பாட்ட வரிசையில் அடுத்து இடம்பெறவுள்ளனர். எனினும் 6ஆம் இலக்கத்திற்கு விக்கெட் காப்பாளர்கள் ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இவர்கள் இருவரையும் இறுதி அணியில் இணைத்து துடுப்பாட்டத்தை வலுப்படுத்த இந்திய அணி முகாமைத்துவம் சிந்திக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் இருவரும் அணியில் இடம்பெற்றால் ஒரு வேகப்பந்துவீச்சாளர் குறைக்கப்படலாம்.

சுழல்பந்து வீச்சைப் பொறுத்த மட்டில் அக்சார் பட்டேல், யுஸ்வேந்த்ர சஹால் ஆகிய இருவரும் அணியில் இடம் பெற அதிகப்பட்ச வாய்ப்பு காணப்படுகிறது.

ஜஸ்ப்ரிட் பும்ராவின் மீள் வருகை மூலம் வேகப்பந்துவீச்சு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் புவ்ணேஷ்வர் குமார் அல்லது தீப்பக் சஹார், ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேவிட் வோர்னர் இத் தொடரில் இடம்பெறாததால் அணித் தலைவர் ஆரொன் பின்ச்சுடன் ஜொஷ் இங்லிஸ் ஆரம்ப ஜோடியாக விளையாடவுள்ளார். அத்துடன் மிச்செல் மார்ஷும் இடம்பெறாததால் முன்னாள் அணித் தலைவரும் அனுபவசாலியுமான ஸ்டீவன் ஸ்மித் 3ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சகலதுறை வீரராக மிளிரத் தொடங்கியுள்ள துடுப்பாட்ட வீரர் க்ளென் மெக்ஸ்வெல், விக்கெட் காப்பாளர் மெத்யூ வேட் ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் அடுத்து இடம்பெறவுள்ளனர்.

சர்வதேச இருபது கிரிக்கெட் போட்டிகளில் சிங்கப்பூருக்காக விளையாடிவந்த துடுப்பாட்ட சகலதுறை வீரர் டிம் டேவிட், அவுஸ்திரேலிய அணியில் பெரும்பாலும் அறிமுகமாவார் என கூறப்படுகிறது.

துடுப்பாட்ட சகலதுறை வீரர் கெமரன் க்றீன், சுழல் பந்துவீச்சாளர் அடம் ஸம்ப்பா, வேகப்பந்து வீச்சாளர்களான பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட் மற்றும் சீன் அபொட் ஆகியோரும் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2007இலிருந்து விளையாடப்பட்டுள்ள 23 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 13 – 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

அதேவேளை அவுஸ்திரேலியா மொத்தமாக விளையாடியுள்ள 162 போட்டிகளில் 85இல் வெற்றிபெற்றுள்ளதுடன் 71இல் தோல்வி அடைந்துள்ளது. சமநிலையில் முடிவடைந்த போட்டியில் சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. மற்றைய 3 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.

இந்தியா விளையாடியுள்ள 179 போட்டிகளில் 114இல் வெற்றிபெற்றுள்ளதுடன் 57இல் தோல்வி அடைந்துள்ளது. சமநிலையில் முடிவடைந்த 3 போட்டிகளில் சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.