இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா…

மொஹாலி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (20) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 4 விக்கெட்களால்  அவுஸ்திரேலியா  வெற்றிகொண்டது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 209 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 4 பந்துகள் மீதிமிருக்க 6 விக்கெட்களை இழந்து 211  ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரொன் பின்ச், கெமரன் க்றீன், ஸ்டீவ் ஸ்மித், மெத்யூ வேட் ஆகியோரது அதிரடி துடுப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவை வெற்றி அடையச் செய்தன.

Cameron Green went 4, 4, 4, 4 the first four balls he faced, India vs Australia, 1st T20I, Mohali, September 20, 2022

ஆரொன் பின்ச் (22), கெமரன் க்றீன் ஆகிய இருவரும் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பின்ச் களம் விட்டகன்றார்.

தொடர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய கெமரன் க்றீன் 30 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைக் குவித்ததுடன் ஸ்டீவ் ஸ்மித்துடன் 2ஆவது விக்கெட்டில் 40 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அதன் பின்னர் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்டீவ் ஸ்மித் (35), க்லென் மெக்ஸ்வெல் (1), ஜொஷ் இங்லிஸ் (17) ஆகியோரை அவுஸ்திரேலியா இழந்தது.

எனினும் அறிமுக வீரர் டிம் டேவிட் (18), மெத்யூ வேட் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்கச் செய்தனர்.

Matthew Wade and Tim David get in on the fist bumps, India vs Australia, 1st T20I, Mohali, September 20, 2022

மெத்யூ வேட் 21 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். வெற்றிக்கு தேவைப்பட்ட ஓட்டங்களை பெட் கமின்ஸ் முதல் பந்திலேயே பவுண்டறி மூலம் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்திய பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 27  ஓட்டங்களுக்கு   2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைக் குவித்தது.

கே. எல். ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் சூரியகுமார் யாதவ்வின் சிறப்பான துடுப்பாட்டமும் இந்தியாவின் மொத்த  எண்ணிக்கைக்கு வலு சேர்த்தன.

Hardik Pandya struck a rapid 30-ball 71 not out, India vs Australia, 1st T20I, Mohali, September 20, 2022

எவ்வாறயினும் இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (11), முன்னாள் அணித் தலைவர் விராத் கோஹ்லி (2) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

எனினும் கே. எல். ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை நல்ல நிலையில் இட்டனர்.

ராகுல் 55 ஓட்டங்ளைப் பெற்று ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 126 ஓட்டங்களாக இருந்தபோது சூரியகுமார் யாதவ் 46 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஒரு புறத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க ஹார்திக் பாண்டியாக அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 30 பந்துகளில் 7 பவுண்ட்றிகள், 5 சிக்ஸ்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார்.

அக்சார் பட்டேல் (6), தினேஷ் கார்த்திக் (6) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். ஹர்ஷால் பட்டேல் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இந்த மூவருடன் ஹார்திக் பாண்டியா மொத்தமாக 62 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் நேதன் எலிஸ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்ப்றினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.