ஓய்வு பற்றி முதல்முறை வாய் திறந்தார் மெஸ்ஸி

கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணமாக இருக்கும் என்ற ஆர்ஜன்டீன கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார்.

ஐந்தாவது முறை உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ள 35 வயதான மெஸ்ஸி, இதுவரை கிண்ணத்தை வெல்லாத நிலையில் உலகக் கிண்ணத்தை எதிர்கொள்ளும் நிலையில் பதற்றத்துடன் இருப்பதாக பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“ஒரே நேரத்தில் ஏக்கமாகவும் பதற்றமாகவும் உள்ளது. இது (எனக்கு) கடைசியாக இருக்கும்” என்று ஸ்டார் பிளஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மெஸ்ஸி குறிப்பிட்டார்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் முன்கள வீரரான மெஸ்ஸி, தனது எதிர்காலம் பற்றி வெளிப்படையாக பேசுவது இது முதல்முறையாகும். எனினும் கட்டார் உலகக் கிண்ணத்திற்கு பின் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி அவர் உறுதியாகக் கூறவில்லை.

ஆர்ஜன்டீனா கடைசியாக ஆடிய 35 போட்டிகளில் தோல்வியுறாத அணியாகவே இம்முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்குவதோடு, 2021இல் பிரேசிலுக்கு எதிரான கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய உற்சாகத்துடனேயே கட்டார் வரவுள்ளது.

“உலகக் கிண்ணத்தில் எதுவும் நிகழலாம். அனைத்துப் போட்டிகளும் கடினமாக இருக்கும். வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள அணிகள் எப்போதும் வெற்றியாளர்களாக இருப்பதில்லை” என்று மெஸ்ஸி கூறினார்.

1978 மற்றும் 1986இல் உலகக் கிண்ணம் வென்றிருக்கும் ஆர்ஜன்டீனா, சி குழுவுக்காக தனது முதல் போட்டியில் வரும் நவம்பர் 22ஆம் திகதி சவூதி அரேபியாவை எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து அந்த அணி மெக்சிகோ மற்றும் போலந்து அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.