ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் அதிரடி ! தென்னாபிரிக்காவை 7 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இந்தியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரஞ்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆவது ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா அபார வெற்றியீட்டியது.

ஷ்ரேயாஸ் ஐயர் குவித்த ஆட்டமிழக்காத அபார சதமும் இஷான் கிஷான் குவித்த அதிரடி அரைச் சதமும் இந்தியாவின் வெற்றியை சுலபமாக்கின.

தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 279 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய இந்தியா 45.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

இந்த முடிவுடன் 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 – 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அணித் தலைவர் ஷிக்கர் தவான் (13), ஷுப்மான் கில் (28) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். (48 – 2 விக்.)

இந்நிலையில் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 161 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியில் பெரும்பங்காற்றினர்

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இஷான் கிஷான் 7 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகளுடன் துரதிர்ஷ்டவசமாக 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் 15 பவுண்டறிகளை விளாசி 113 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 32 மாதங்களின் பின்னர் குவித்த சதம் இதுவாகும். அத்தடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற 2ஆவது சதம் ஆகும்.

ஷ்ரேயாஸ் ஐயருடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்த சஞ்சு செம்சன் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா, ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம் ஆகியோரின் அபார அரைச் சதங்களின் உதவியுடன் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைக் குவித்தது.

கடந்த சில போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவர் டெம்பா பவுமா இன்றைய போட்டியில் விளையாடாததுடன் அவருக்குப் பதிலாக கேஷவ் மஹாராஜ் அணித் தலைவராக விளையாடினார்.

குவின்டன் டி கொக் (5), ஜான்மன் மாலன் (25) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 129 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

ரிஸா ஹெண்ட்றிக்ஸ் 74 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த பின்னர் ஹென்றிச் க்ளாசனுடன் 4ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்த ஏய்டன் மார்க்ராம் 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மத்திய வரிசையில் க்ளாசன் 30 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் வெய்ன் பார்னல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெறவுள்ளது.

Shreyas Iyer plays on the up, India vs South Africa, 2nd ODI, Ranchi, October 9, 2022

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்