ஆசிய கிண்ணத்தை 7ஆவது தடவையாக இந்தியா சுவீகரித்தது : இலங்கை மோசமான துடுப்பாட்டம்

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 14 வருடங்களின் பின்னர் விளையாட தகுதிபெற்ற இலங்கை மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவிடம் 8 விக்கெட்களால் படுதோல்வி அடைந்தது.

இந்த வெற்றியுடன் ஆசிய கிண்ணத்தை 7ஆவது தடவையாக இந்தியா சுவீகரித்தது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 66 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 8.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி 6 வருடங்களின் பின்னர் ஆசிய கிண்ணத்தை மீண்டும் சுவீகரித்தது.

இந்தியாவின் அதிரடி ஆரம்ப வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தானா 25 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அணித் தலைவர் ஹார்மன்ப்ரீத் ரொட்றிகஸ் ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றார்.

9ஆவது ஓவரில் மந்தானாவுக்கு அரைச் சதம்  குவிப்பதற்கு ஏதுவாக அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஓற்றைi ஒட்டத்தை எடுத்து அவருக்க துடுப்பெடுத்தாட வாய்ப்பு வழங்கியமை விசேட அம்சமாகும். அணித் தலைவியின் எதிர்பார்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஒரு பவுண்டறி, ஒரு சிக்ஸ் மூலம் 10 ஓட்டங்களை; பெற்று அரைச் சதத்தை மந்தானா பூர்த்தி செய்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா (5), ஜெமிமா ரொட்றிகஸ் (2) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

இலங்கை பந்துவீச்சில் இனோக்கா ரணவீர, காவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் தலா 17 ஓட்டங்களுக்கு  தலா  ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை ஆரம்பத்திலிருந்தே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்களை அடுத்தடுத்து இழந்ததுடன் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றது.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணி பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

விக்கெட்களுக்கு இடையில் ஓடுவதில் புரிந்துணர்வின்மை, மோசமான அடி தெரிவுகள் என்பன இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

அணித் தலைவி சமரி அத்தபத்து 3ஆவது ஓவரில் அநாவசியமாக ரன் அவுட் ஆனவுடன் இலங்கையின் விக்கெட்கள் சரியத் தொடங்கின.

இந்த சுற்றுப் போட்டி முழுவதும் பிரகாசிக்கத் தவறிய சமரி அத்தபத்து பெரும்பாலும் அணியிலிருந்து நீக்கப்படலாம் என கருதப்படுகிறது. அத்துடன் மேலும் சில சிரேஷ்ட வீராங்கனைகள் ஓய்வு பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் வருட மகளிர் ஆசிய கிண்ண பிரிக்கெட்டில் இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக விளங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரம பொறுமையைக் கடைப்பிடிக்காமல் அவசரப்பட்டு மோசமான அடி தெரிவினால் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அனுஷ்கா சஞ்சீவனி நிலக்ஷி டி சில்வா, ஹாசினி பெரேரா, காவிஷா டில்ஹாரி, சுகந்தி  ஆகிய அனைவரும் வந்தவேகத்தில் ஆட்டமிழந்து சென்றனர்.

ஓஷாதி ரணசிங்க நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 13 ஓட்டங்களைப் பெற்றார். கடைநிலை வீராங்கனை இனோக்கா ரணவீர ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களையும் அச்சினி குலசூரிய ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 22 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் இலங்கையின் நிலை மேலும் மோசமடைந்திருக்கும்.

இந்திய பந்துவீச்சில் ரேணுகா சிங் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்னேஹ் ரானா 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஜேஷ்வரி கயக்வாட் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகியாக ரேணுகா சிங் தெரிவானதுடன் தொடர்நாயகி விருது தீப்தி ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த சுற்றுப் போட்டியில் ஜெமிமா ரொட்றிகஸ் மொத்தமாக 217 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில்  முன்னிலையில் இருந்தார்.

பந்துவீச்சில் தீப்தி ஷர்மாவும் இனோக்கா ரணவீரவும் தலா 13 விக்கெட்களுடன் முதலிடங்களை பகிர்ந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.