ராஷித் கான் அதிரடி : அவுஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பை தள்ளிப்போட்டுள்ள ஆப்கானிஸ்தான் !

ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான தனது கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 4 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

சகலதுறை வீரர் ராஷித் கானின் கடைசிக் கட்ட அதிரடி ஆட்ட முயற்சி ஆப்கானிஸ்தானுக்கு  பலனளிக்காமல் போனது. ஆனால், நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பை அவரது அதிரடி தள்ளிப்போட்டுள்ளது.

இன்றைய போட்டியில் பெறப்பட்ட சுமாரான வெற்றி அரை இறுதி வாய்ப்பை பெறுவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு போதமானதாக அமையவில்லை. இதன் காரணமாக இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நாளை சனிக்கிழமை (05) நடைபெறவுள்ள போட்டி முடிவின் பின்னரே அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட தகுதிபெறுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

மேலும், இன்றைய போட்டி முடிவுகளை அடுத்து நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் தலா 7 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் நிகர ஓட்ட வேக  (+2.113)  அடிப்படையில் நியூஸிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று   தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர் உஸ்மான் கானி (2) 3ஆவது ஓவரிலும் ரஹ்மானுல்லா குர்பாஸ் (30) 6ஆவது ஓவரிலும் ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை 40 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஸத்ரான் (26), குல்பாதின் நய்ப் (39) ஆகிய இருவரும் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தைக் கொடுத்தனர்.

எனினும், இப்ராஹிம் ஸத்ரான், குல்பாதின் நய்ப், நஜிபுல்லா ஸத்ரான் (0) ஆகிய மூவரும் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது அடுத்தடுத்து ஆட்டமிழக்க  ஆப்கானிஸ்தான்  நெருக்கடிக்குள்ளானது.

அணித் தலைவர் மொஹமத் நபி ஒரு ஓட்டத்துடன் களம் விட்டு வெளியேறியமை ஆப்கானிஸ்தான் மேலும் அழுத்தத்திற்குள்ளானது. (103 – 6 விக்.)

தார்விஷ் ரசூல் (15), ராஷித் கான் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் இணைந்து 33 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு தெம்பூட்டிய அதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.

கடைசி ஓவரில் ஆப்பானிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் வீசிய முதலாவது பந்து வைட் ஆனது. அதேவேளை ராஷித் கான் பந்துவீச்சாளர் எல்லையிலிருந்து துடுப்பாட்ட வீரர் எல்லைக்கு ஓடினார்.

மெத்யூ வேட் எறிந்த பந்து விக்கெட்டில் படாததால் ராஷித் கான் தப்பித்துக்கொண்டார். ஆனால், மறுமுனையில் தார்விஷ் ரசூலை ஸ்டொய்னிஸ் ரன் அவுட் செய்தார்.

இந்நிலையில் கடைசி 6 பந்துகளில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ராஷித் கான் 16 ஓட்டங்களை விளாசிய போதிலும் அவரது கடைசிக் கட்ட முயற்சி பலனற்று போனது.

23 பந்துகளை எதிர்கொண்ட ராஷித் கான் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

வழமையான அணித் தலைவர் ஆரோன் பின்ச் உபாதை காரணமாக விளையாடாததுடன் அவருக்குப் பதிலாக தலைமைப் பொறுப்பு மெத்யூ வேடிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்ச்சுக்குப் பதிலாக ஆரம்ப வீரராக அணியில் இணைக்கப்பட்ட கெமரன் க்றீன் (3) துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார்.

டேவிட் வோர்னர் (25), அணிக்கு மீளழைக்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் (4) ஆகியோர் ஆட்டமிழக்க பவர் ப்ளே நிறைவில் அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 52 ஓட்டங்களாக இருந்தது.

தொடர்ந்து மிச்செல் மார்ஷ் (45) மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (25) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தபோது மார்ஷ் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், க்ளென் மெக்ஸ்வேல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். (139 – 4 விக்.)

ஆனால், அதன் பின்னர் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்டொய்னிஸ், மெத்யூ வேட் (6), பெட் கமின்ஸ் (0), கேன் ரிச்சர்ட்ஸன் (1) ஆகியோர் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலியா 168 ஓட்டங்களைப் பெற்றது.

க்லென் மெக்ஸ்வெல் 32 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பஸால்ஹக் பாறூக்கி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட், Australia, Afghanistan, Twenty20 World Cup Cricket

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.