தென் ஆபிரிக்காவின் அரை இறுதி வாய்ப்பை தடுக்குமா நெதர்லாந்து ?

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் குழு 1இலிருந்து நியூஸிலாந்தும் இங்கிலாந்தும் அரை இறுதிக்கு தெரிவாகியுள்ள நிலையில் குழு 2 இலிருந்து தெரிவாகவுள்ள அணிகளைத் தீர்மானிக்கும் 3 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையும் (06) திங்கட்கிழமையும் (07) நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டிகளில் தென் ஆபிரிக்காவும் இந்தியாவும் வெற்றிபெற்றால் அவை இரண்டும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்து பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ், இந்தியா ஆகிய அணிகள் வெற்றிபெற்றால் வெற்றிபெறும் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தென் அபிரிக்காவும் இந்தியாவும் தோல்வி அடைந்தால் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியும் இந்தியாவும் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.

இந் நிலையில் தென் ஆபிரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (06) காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அரை இறுதிக்கான தகுதியைப் பெறவேண்டுமானால் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

சர்வதேச தரம்வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களும் பந்துவீச்சாளர்களும் தென் ஆபிரிக்க அணியில் இடம்பெறுவதால் அவ்வணி நெதர்லாந்தை இலகுவாக வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் (தகுதிகாண்) இலங்கைக்கு எதிராக தலைகீழ் வெற்றியை ஈட்டிய நமிபியாவையும் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் வெற்றிகொண்ட நெதர்லாந்து, சுப்பர் 12 சுற்றில் பங்களாதேஷுக்கு சவால் விடுத்து தோல்வி அடைந்தது.

ஆனால், இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் படு தோல்விகளை சந்தித்தது.

மறுபுறத்தில் ஸிம்பாப்வேயுடனான போட்டி மழையினால் கைவிடப்பட, பங்களாதேஷ், இந்தியா ஆகிய அணிகளை தென் ஆபிரிக்கா இலகுவாக வெற்றிகொண்டது.

ஆனால் பாகிஸ்தானுடனான போட்டியில் தென் ஆபிரிக்கா படுதோல்வி அடைந்தது.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் வெற்றியீட்டி அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்வதற்கு தென் ஆபிரிக்கா சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தவேண்டிவரும்.

தென் ஆபிரிக்கா சார்பாக ரைலி ரூசோவ் சதம் குவித்துள்ளதுடன் குவின்டன் டி கொக், ஏய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர் ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் நாளைய போட்டியில் இதனைவிட சிறப்பாக துடுப்பெடுத்தாடுவது அவசியம்.

அதேபோன்று அன்ரிச் நோக்கியா, லுங்கி நுகிடி, வெய்ன் பார்னல், கெகிசோ ரபாடா ஆகியோர் துல்லியமாக பந்துவீசவேண்டும்.

அதேவேளை, மெக் டவ்ட், கொலின் அக்கர்மன், விக்ரம்ஜித் சிங், டொம் கூப்பர் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் பாஸ் டி லீட், போல் வென் மீக்கெரென், ப்ரெட் க்ளாசென் ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையாக செயற்பட்டு நெதர்லாந்து அணிக்கு கௌரவத்தை தேடிக்கொடுக்க முயற்சிப்பார்கள்.

அணிகள்

தென் ஆபிரிக்கா: குவின்டன் டி கொக், டெம்பா பவுமா (தலைவர்), ரைலி ரூசோவ், ஏய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், ஹெய்ன்ரிச் க்ளாசென் அல்லது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னல், கெஷவ் மகாராஜ் அல்லது அன்ரிச் நொக்கியா, லுங்கி நிகிடி, டப்ரெய்ஸ் ஷம்சி, கெகிசோ ரபாடா.

நெதர்லாந்து: ஸ்டெபான் மைபேர்க், மெக்ஸ் ஓ’டவ்ட், டொம் கூப்பர், கொலின் அக்கர்மன், பாஸ் டி லீட், ஸ்கொட் எட்வேர்டஸ் (தலைவர்), ரோலோவ் வென் டேர் மேர்வ், லோகன் வென் பீக், ப்ரெட் க்ளாசென், போல் வென் மீக்கெரென், ப்றெண்டன் க்ளோவர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.