சதீர சமரவிக்ரம அபார சதம் ; பலமான நிலையில் தமிழ் யூனியன்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கலம்போ கிரிக்கெட் கழக (CCC) அணியை எதிர்த்தாடும் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கழக அணி பலமான நிலையில் இருக்கிறது.

எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான 4 நாள் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தமிழ் யூனியன், முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னாள் இலங்கை வீரரும் புனித சூசையப்பர் கல்லூரியின் முன்னாள் வீரரும் அணித் தலைவருமான சதீர சமரவிக்ரம அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 188 ஓட்டங்களைப் பெற்று  தமிழ் யூனியன்  அணியை பலப்படுத்தினார். 243 பந்துகளை எதிர்கொண்ட சமரவிக்ரமவின் துடுப்பாட்டத்தில் 18 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கியிருந்தன.

ஆரம்ப வீரர் நவோத் பரணவித்தானவுடன் ஆரம்ப விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்த சதீர சமரவிக்ரம, 2ஆவது விக்கெட்டில் ரொன் சந்த்ரகுப்தாவுடன் மேலும் 130 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார்.

நவோத் பரணவித்தான 54 ஓட்டங்களையும் ரொன் சந்த்ரகுப்தா 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட சந்துஷ் குணதிலக்க 15 ஓட்டங்களையும் கமேஷ் நிர்மல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

ரவிந்து பெர்னாண்டோ 14 ஓட்டங்களுடனும் டிலும் சுதீர 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

சிசிசி பந்துவீச்சில் லக்ஷான் சந்தகேன் 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.