தனஞ்சய, பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய இருவருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் விளையாட அழைப்பு!!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான தனஞ்சய டி சில்வா மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய இருவரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
9 ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டித் தொடரின் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க விளையாடவுள்ளதுடன், சில்லெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக சகல துறை வீரரான தனஞ்சய டி சில்வா விளையாடவுள்ளார்.
இதன்படி, பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் வெளிநாட்டு லீக் கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடுவதற்கு தெரிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அண்மையில் நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்க 214 ஓட்டங்களை குவித்து 7 ஆவது இடத்தை பிடித்தார். இப்போட்டித் தொடரில் தனஞ்சய டி சில்வா 177 ஓட்டங்களை குவித்ததுடன், 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்திருந்தார்.
2023 ஆவது ஆண்டு நடைபெறவுள்ள 9 ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 7 அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை