“என் ஊதியத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு வழங்க விரும்புகிறேன்!”

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ், தனது ஊதிய தொகையை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்காகத் தருவதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். மேலும், இதில் பெரும் உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் அந்நாட்டின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. எனவே இதைச் சரிசெய்ய பாகிஸ்தான் உலக நாடுகளின் உதவியையும் கோரி வருகிறது.

இதனிடையே பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணியினர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த முழு டெஸ்ட் தொடருக்கான தனது ஊதியத் தொகையைப் பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு நிவாரண நிதிக்குத் தருவதாகக் கூறியுள்ளார்.

இது பற்றி அவரது டுவிட்டர் பதிவில், “17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் பாகிஸ்தான் வருவது உற்சாகமாக இருக்கிறது. இந்த வருடம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் நாட்டையும், நாட்டு மக்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறையக் கொடுத்துள்ளது. அதற்குக் கைமாறாக கிரிக்கெட்டைத் தாண்டி பிற உதவிகளுக்கு அதைத் திரும்பக் கொடுப்பது மட்டுமே சரியானது என்று நினைக்கிறேன். எனவே, இந்த டெஸ்ட் தொடருக்கான எனது ஊதியத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க விரும்புகிறேன். இது வெள்ளத்தால் பாதித்த பகுதிகளைச் சரி செய்ய உதவும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

அவருக்குப் பலரும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.