நெதர்லாந்து – அமெரிக்க போட்டியுடன் பீபா உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்று இன்று ஆரம்பம்
பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நெதர்தலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் கத்தாரின் தோஹா கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள போட்டியுடன் பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 16 அணிகள் நொக் அவுட் சுற்று இன்று சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குழு ஏயில் 7 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை நெதர்லாந்தும் பி குழுவில் இங்கிலாந்துக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தை ஐககிய அமெரிக்காவும் பெற்று இரண்டாம் சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடுகின்றன.
இந்த இரண்டு அணிகளும் முதல் சுற்றில் தோல்வி அடையாத போதிலும் அவற்றின் போட்டி பெறுபேறுகளின் பிரகாரம் நெதர்லாந்து பலம்வாய்ந்த அணியாகத் தென்படுகிறது.
ஏ குழுவில் செனகல், வரவேற்பு நாடான கத்தார் ஆகிய அணிகளை தலா 2 – 0 என வெற்றிகொண்ட நெதர்லாந்து, ஈக்வடோருடான போட்டியை 1 – 1 என வெற்றிதோல்யின்றி முடித்துக்கொண்டிருந்தது.
மறுபுறத்தில் பி குழுவில் வேல்ஸ் (1 – 1), ஈக்வடோர் (1 – 1) ஆகிய அணிகளுடனான போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட ஐக்கிய அமெரிக்கா, கடைசிப் போட்டியில் தனது பரம வைரி ஈரானை 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டிருந்தது.
இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்னர் நெதர்லாந்தும் ஐக்கிய அமெரிக்காவும் 5 தடவைகள் சர்வதேச சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடி இருந்தன. அவற்றில் 1998க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் விளையாடப்பட்ட 4 போட்டிகளில் நெதர்லாந்து வெற்றிபெற்றிருந்தது. 2015இல் நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் ஐக்கிய அமெரிக்கா வெற்றிபெற்றிருந்தது.
1994இல் பிரேஸிலிடம் கால் இறுதிப் போட்டியில் 1 – 2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்த பின்னர் ஐரோப்பா அல்லாத நாடுகளுடன் விளையாடிய 19 போட்டிகளில் (13 வெற்றிகள், 6 வெற்றிதோல்வியற்ற முடிவுகள்) நெதர்லாந்து தோற்கவில்லை. எவ்வாறாயினும் வேற்றிதோல்வியின்றி முடிவடைந்த இரண்டு சந்தர்ப்பங்களில் (1998இல் பிரேஸில், 2014இல் ஆர்ஜன்டீனா) பெனல்டிகள் மூலம் நெதர்லாந்து வெளியேற்றப்பட்டிருந்தது.
இதேவேளை, போர்த்துக்கல்லை 2002இல் 3 – 2 என வெற்றிகொண்ட பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான கடைசி 11 உலகக் கிண்ணப் போட்டிகளில் அமெரிக்கா வெற்றிபெற்றதில்லை (6 வெற்றிதோல்வியற்ற முடிவுகள், 5 தோல்விகள்).
கடந்த 5 உலகக் கிண்ண அத்தியாயங்களில் 2006ஐத் தவிர்ந்த மற்றைய 4 அத்தியாயங்களிலும் நெதர்லாந்து கால் இறுதிவரை முன்னேறியிருந்தது.
பின்களவீரர்களான வேர்ஜில் வன் டிஜிக், டென்ஸில் டம்ஃப்ரைஸ், மத்திய கள வீரர் ஃப்ரன்கி டி ஜொங், முன்கள வீரர்களான கோடி கெக்போ (3 லீக் போட்டிகளில் கோல் போட்டவர்), மெம்ஃபிஸ் டிப்பே ஆகியோர் நெதர்லாந்து அணியில் இடம்பெறும் பிரதான வீரர்களாவர்.
ஐக்கிய அமெரிக்க அணியில் பின்கள வீரர் சேர்ஜினோ டெஸ்ட், மத்திய கள வீரர்களான வெஸ்டன் மெக்கென்னி, யூனுஸ் மூசா, கிறிஸ்டியன் பியூலிசிக், முன்கள வீரர் ஜியோன்னி ரெய்னா ஆகியோர் முக்கிய வீரர்களாவர்.
இன்றைய இந்த நொக் அவுட் போட்டியில் வெற்றிபெறுதவற்கு அனுகூலமான அணியாக நெதர்லாந்து தென்படுகிறது.
எனினும் முதல் சுற்றில் இடம்பெற்ற சில எதிர்பாராத முடிவுகளை நோக்கும்போது நெதர்லாந்துக்கு அமெரிக்கா அதிர்ச்சி ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறத்தோன்றுகிறது
கருத்துக்களேதுமில்லை