முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தை 4ஆவது கால் இறுதியில் சந்திக்கிறது செனகல்

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் 4ஆவது கால் இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தை ஆபிரிக்க நாடான செனகல் சந்திக்கவுள்ளது.

இப் போட்டி அல் பெய்த் விளையாட்டரங்கில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்தும் செனகலும் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் ஒன்றையொன்று  எதிர்த்தாடுவது இதுவே முதல் தடவையாகும்.
ஆபிரிக்க நாடுகளுக்கு எதிராக இதற்கு முன்னர் நடைபெற்ற 7 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததில்லை.

 

நொக் அவுட் சுற்றில் ஆபிரிக்க நாடு ஒன்றை ஒரே ஒருமுறை சந்தித்த இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது.


கெமறூனுக்கு எதிராக இத்தாலியில் 1990இல்  நடைபெற்ற அப் போட்டியில் வழமையான  போட்டி  நேரத்தில் கெறி லினேக்கர் போட்ட பெனல்டி கோல் உட்பட மேலதிக நேரத்தில் போட்ட மற்றொரு பெனல்டி கோல் மூலம்  இங்கிலாந்து (3 – 2) வெற்றிபெற்றிருந்தது.

ரஷ்யாவில் 2018இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியிலும் கால் இறுதிக்கு முன்னேறிய இங்கலாந்து, இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக இம் முறையும் கால் இறுதிக்கு முன்னேற முயற்சிக்கவுள்ளது.
குழு பியில் இடம்பெற்ற இங்கிலாந்து தனது ஆரம்பப் போட்டியில் ஈரானை 6 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்திருந்தது. ஐக்கிய அமெரிக்காவுடனான இங்கிலாந்தின் அடுத்த போட்டி கோல் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. தனது அயல் நாடான வேல்ஸுடனான கடைசிப் போட்டியில் மிக இலகுவாக 3 – 0 என இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது.
குழு ஏயில் நெதர்லாந்திடம் தனது ஆரம்பப் போட்டியில் தொல்வி (0- 2) அடைந்த செனகல், 2ஆவது போட்டியில் வரவேற்பு நாடான கத்தாரை 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது. கடைசிப் போட்டியில் 2 – 1 என்ற கோல் வித்தியசாத்தில் ஈக்வடோரை வெற்றிகொண்டதன் மூலம் செனகல் நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
லீக் சுற்றில் தோல்வி அடையாத அணியாக 16 அணிகள் சுற்றில் விளையாட தகுதிபெற்ற இங்கிலாந்து அந்த சுற்றில் செனகல்லை வெற்றிகொள்வதற்கு அனுகூலமான அணியாக விளங்குகிறது. எனினும் ஈக்வடோரை வீழ்த்திய செனகல், நொக்-அவுட் சுற்றில் இங்கிலாந்துக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘எமது அணி வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாக கருதப்படுகிறது. ஆனால், நொக் அவுட் போட்டி ஒன்றில் அவ்வாறு கருத முடியாது’ என இங்கிலாந்தின் பயற்றுநர் சவுத்கேட் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் அணித் தலைவர் ஹெரி கேன் ஆவார்.
ரஷ்யா 2018 உலகக் கிண்ணத்தில் அதிக (6) கோல்களைப் போட்டு தங்கப் பாதணியை வென்ற ஹேரி கேன் இந்த வருடம் இதுவரை ஒரு கோலும் போடவில்லை.
அவரை விட இங்கிலாந்து அணியில் மத்திய கள வீரர்களான ஜூட் பெலிங்ஹாம், ஃபில் ஃபோடென், டெக்லான் ரைஸ், முன்கள வீரர் புக்காயோ சாக்கா, கோல்காப்பாளர் ஜோர்டன் பிக்ஃபோர்ட் ஆகியோர் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய வீரர்களாவர்.
செனகல் அணியில் கோல்காப்பாளர் எடுவார்ட் மெண்டி, பின்கள வீரர் கலிதவ் கௌலிபாலி, மத்திய கள வீரர்களான இத்ரிசா குயேயே, நம்ப்பேலிஸ் மெண்டி, இலிமான் எண்டியாயே ஆகியோர் முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்