முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வென்றது பங்களாதேஷ்

இந்தியாவுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட்டினால் வென்றது. பங்களாதேஷின் மீர்பூர் நகரில் இப்போட்டி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 186 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. கே.எல். ராகுல் 70 பந்துகளில் 73 ஓட்டங்களைக் குவித்தார்.

ஷகீப் அல் ஹசன் 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் எபாடொட் ஹொசைன் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 46 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

அணி;த்தலைவர் லிட்டன் தாஸ் 63 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

9 ஆவது வரிசை துடுப்பாட்ட வீரர் மெஹிதிஹசன் மிராஸ் 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களைப் பெற்றார்.

பங்களாதேஷ் அணி 136 ஓட்டங்களுடன் 9 ஆவது விக்கெட்டை இழந்தது. எனினும், மெஹிதி ஹசன் மிராஸும் 11 ஆவது வரிசை வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானும் 10 ஆவது விக்கெட்டுக்காக 51 ஓட்டங்களைக் குவித்தனர்.

முஸ்தபிஸுர் ரஹ்மான் 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் மொஹம்மத் சிராஜ் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

வோஷிங்டன் சுந்தர் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் சென் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

போட்டியின் ஆட்டநாயகனாக  மெஹிதிஹசன் மிராஸ் தெரிவானார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்