கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் – நிறுவனங்களுக்கும் மிகவும் சிறப்பான அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுத் திட்டம்

கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுத் திட்டம் (Canada Emergency Response Benefit (CERB)) ஏற்கனவே நடைமுறைக்கு வந்து, பல கனேடியர்களுக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிலையில், இதுவரை அறிவிக்கப்பட்ட உதவிகளுக்குத் தகுதி பெறாத மேலும் அதிக கனேடிய வணிக நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் உதவியான புதிய நடவடிக்கைகளையும், மாற்றங்களையும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று அறிவித்தார்.

 

கனடா அவசர சம்பள மானியத்திற்குத் தகுதி பெறுவதற்கு வருமானம் 30 சதவீதம் குறைவடைந்ததென நிறுவனங்கள் காண்பிக்கவேண்டியிருந்த விதி, மார்ச் மாத வருமானம் 15 சதவீதம் குறைவடைந்ததெனக் காண்பித்தால் போதுமானதெனத் தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களுக்கான மானியத்திற்கு, வருமானம் 30 சதவீதம் குறைவடைந்திருக்கவேண்டுமென்ற விதியில் மாற்றம் இருக்க மாட்டாது. வருமான மாற்றத்தைக் காண்பிப்பதற்கு 2020 ஆம் ஆண்டின் ஜனவரி, பெப்ரவரி மாதங்களின் வருமானங்களையும் நிறுவனங்கள் பயன்படுத்தலாம். பல புதிய வணிக நிறுவனங்களும், தொடக்கநிலை வணிக முயற்சிகளும் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்திற் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இலாப நோக்கற்ற அமைப்புக்களும், தொண்டு நிறுவனங்களும் வருமான இழப்பைக் கணக்கிடும்போது அரசின் மானியங்களைச் சேர்த்து அல்லது தவிர்த்துக் கணக்கிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களிலும், இலாப நோக்கற்ற நிறுவனங்களிலும் உள்ள பணியாளர்களில் ஒவ்வொருக்கும் வாரமொன்றுக்கு 847 டொலர் வரையான பணத்தை அரசு வழங்கும். இந்தக் கொடுப்பனவுகள் மார்ச் 15 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படும்.

 

கனடா அவசர சம்பள மானியம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படாதமையால் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தத் திட்டத்தை இயலுமான விரைவில் நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் மக்களவையை மீண்டும் கூட்டுவதற்குத் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் அரசு கோரிக்கை விடுக்கிறது. இத்துடன், பிரதமர் அமைச்சரவையின் உறுப்பினர்களை இன்று நேரில் சந்தித்து உரையாற்றவுள்ளார்.

 

கனடா அவசர வணிகக் கணக்குக் கடன் திட்டம் (Canada Emergency Business Account Loan) நாளை, ஏப்ரல் 9 ஆந் திகதி ஆரம்பிக்கப்படுமென நிதியமைச்சர் பில் மோர்னோ அறிவித்துள்ளார். சிறு வணிக நிறுவனங்களும், லாப நோக்கற்ற நிறுவனங்களும், அவற்றின் வங்கிகளின் ஊடாக 40,000 டொலர் வரையான கடனைப் பெறக் கூடியதாக இருக்கும். 2022 டிசம்பர் 31 இற்கு முன்பாகக் கடன்தொகையைத் திருப்பிச் செலுத்துவோருக்குக் கடனின் 25 சதவீதம் வரையான, 10,000 டொலர் வரையான பகுதி தள்ளுபடி செய்யப்படும். நாளை முதல் வணிக நிறுவனங்கள் அவற்றின் வங்கிகளில் அல்லது கூட்டுறவு வங்கிகளில் (credit union) கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்குத் தகுதி பெறாத, அதேவேளை வேலை நேரம் கணிசமாகக் குறைவடைந்து தற்போது வாரமொன்றுக்குப் பத்து மணித்தியாலங்களோ, அல்லது அதனிலும் குறைந்த அளவு நேரமோ வேலை செய்வோருக்கான அறிவிப்புக்களை அரசு எதிர்வரும் நாட்களில் வெளியிடும். இதேபோன்று, பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் ஓய்வூதிய வருமானமும், சேமிப்புக்களும் பாதிக்கப்பட்ட முதியோருக்கு ஆதரவான திட்டங்களும் அறிவிக்கப்படவுள்ளன.

 

கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட இளையோருக்கும், சிறு வணிக நிறுவனங்களுக்கும் உதவியாக இவ்வாண்டுக்கான கனடா கோடை வேலைவாய்ப்புத் திட்டத்தில் (Canada Summer Jobs (CSJ)) பிரதமர் ட்ரூடோ கணிசமான மாற்றங்களை அறிவித்துள்ளார். மாணவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு ஏற்படும் செலவினத்தின் 100 சதவீதம் வரையான பணத்தையும் CSJ திட்ட வேலைகொள்வோருக்கு அரசு மானியமாக வழங்கும். மாணவர்கள் வழமையிலும் தாமதமாக வேலையில் இணைந்து கொள்வதற்கு உதவியாக வேலைவாய்ப்புக்களுக்கான காலம் எதிர்வரும் பனிக்காலம் வரை நீடிக்கப்படும். கோவிட்-19 காரணமாக அவற்றின் செயற்பாடுகளைக் குறைத்துக் கொண்ட நிறுவனங்கள் மாணவர்களைப் பகுதி நேர அடிப்படையில் பணிக்கு அமர்த்தக் கூடியதாக இருக்கும்.

இளைய கனேடியர்களின் நிதித் தேவைக்கும், அவர்கள் தேவையான அனுபவத்தைப் பெறுவதற்கும் உதவியாக, இந்தப் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட வேலை கொள்வோர், இளைய கனேடியர்களைப் பணியணியில் இணைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் தமது சேவைகளில் மாற்றங்களைச் செய்ய முன்வரவேண்டுமெனப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.